உரோம் திரும்பிக்கொண்டிருந்த விமானப் பயணத்தில், செய்தியாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் உரோம் திரும்பிக்கொண்டிருந்த விமானப் பயணத்தில், செய்தியாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

தொடர்ந்து பணியாற்ற இறைவன் சக்தியளிக்கிறார் - திருத்தந்தை

குடும்பங்கள் துவங்கி, உலக நாடுகள் வரை, ஒருவரை ஒருவர் வசைபாடும் கலாச்சாரம் வளர்ந்துவரும் இந்நாள்களில், அன்னை தெரேசா சபை சகோதரிகளின் பணி, திருஅவை ஓர் அன்னை என்பதை நினைவுறுத்துகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பயணங்கள் செய்வது எனக்குக் களைப்பை உருவாக்குவதில்லை, எனக்குத் தேவையான சக்தியை இறைவன் தருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

மே 5ம் தேதி முதல் 7ம் தேதி முடிய பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா நாடுகளில் தன் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, இச்செவ்வாய் மாலை, உரோம் நகர் திரும்பிக்கொண்டிருந்த விமானப் பயணத்தில், செய்தியாளர்களுடன் மேற்கொண்ட உரையாடலில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

பல்கேரியா, வட மாசிடோனியா நினைவுகள்

பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா நாடுகளைக் குறித்த தன் எண்ணங்கள், ஆர்த்தடாக்ஸ் சபைகளுடன் கொண்டுள்ள உறவு, தியாக்கோன் பணியில் பெண்கள், மற்றும் தனக்கு இறைவன் வழங்கும் சக்தி ஆகியவை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தத் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தையின் எண்ணங்களில் ஆழமாகப் பதிந்த நினைவுகள் குறித்து கேள்வி எழுந்தபோது, பல்கேரியா பல நூற்றாண்டுகள் கிறிஸ்தவத்தில் ஆழ்ந்திருப்பதும், வட மாசிடோனியா பழங்காலம் முதல் கிறிஸ்துவத்தில் வளர்ந்திருந்தாலும், இளமையுடன் விளங்குவதும் தன் மனதில் ஆழப் பதிந்த எண்ணங்கள் என்று கூறினார்.

திருத்தூதர் பவுல் மாசிடோனியாவுக்கு வந்த வரலாற்றை மறவாமல் வாழும் அம்மக்கள், அவர்கள் நாடு வழியாகத்தான் கிறிஸ்தவம் ஐரோப்பாவுக்குள் வந்தது என்பதையும் அறிக்கையிட தயங்குவதில்லை என்று திருத்தந்தை சிறப்பாகக் குறிப்பிட்டார்.

திருத்தந்தைக்கு இறைவன் வழங்கும் சக்தி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பயணங்கள் மேற்கொள்வதற்கும், தொடந்து பணியாற்றுவதற்கும் எங்கிருந்து சக்தி பெறுகிறார் என்ற கேள்வி எழுந்தபோது, தான் எவ்வித மந்திர மாயங்கள் செய்வதில்லை என்றும், இறைவனுக்கு உகந்த பணியாற்ற தனக்கு சக்தி வழங்கவேண்டும் என்று தான் வேண்டுவதை, இறைவன் நிறைவேற்றி வைக்கிறார் என்றும் திருத்தந்தை பதிலளித்தார்.

ஆர்த்தடாக்ஸ் சபைகளுடன் உறவு

ஆர்த்தடாக்ஸ் சபைகளுடன் கத்தோலிக்கத் திருஅவையின் உறவு குறித்து எழுந்த கேள்விக்கு விடையளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவொரு இறைவனை வணங்கும் அனைத்து கிறிஸ்தவ சபைகளும், கரங்களை இணைத்து, உடன்பிறந்தோராக வணங்குவது ஒன்றே சிறந்த வழி என்று கூறினார்.

அருளாளரான கர்தினால் Stepinac அவர்களை புனிதராக உயர்த்தும் வழிமுறைகள் நிகழ்ந்துவந்த வேளையில், செர்பிய முதுபெரும் தந்தை இரேனியுஸ் அவர்களின் ஆலோசனைகளுக்கு தான் செவிமடுத்ததாகக் கூறியத் திருத்தந்தை, உண்மையைக் கண்டுணர தான் அஞ்சியதில்லை என்றும், இறைவனின் தீர்ப்பைக் குறித்து மட்டுமே தான் அஞ்சுவதாகவும் கூறினார்.

தியாக்கோன் பணியில் பெண்கள்

தியாக்கோன் பணியில் பெண்களை இணைப்பது குறித்து எழுந்த கேள்விக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிலளித்த வேளையில், இக்கேள்வியைக் குறித்து, 2016ம் ஆண்டு நிறுவப்பட்ட ஆய்வுக் குழு, ஒரு சில கருத்து வேறுபாடுகளால் தடைப்பட்டிருப்பதையும், இக்கேள்வியைக் குறித்து இன்னும் தெளிவுகள் தேவைப்படுகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விடையளித்தபின், வட மாசிடோனியாவில், புனித அன்னை தெரேசாவின் நினைவிடத்திற்கு தான் சென்றதைக் குறித்து சிறப்பாக நினைவுகூர்ந்து பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பங்கள் துவங்கி, உலக நாடுகள் வரை, ஒருவரை ஒருவர் வசைபாடும் கலாச்சாரம் வளர்ந்துவரும் இந்நாள்களில், அன்னை தெரேசா சபை சகோதரிகளின் பணி, திருஅவை ஓர் அன்னை என்பதை நினைவுறுத்தும் வண்ணம் தொடர்ந்து வருகிறது என்று திருத்தந்தை செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2019, 15:21