சோஃபியா நகர் Knyaz Alexander சதுக்கத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை சோஃபியா நகர் Knyaz Alexander சதுக்கத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை 

சோஃபியா நகர் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

இறைவன் ஆற்றும் மூன்று விடயங்களை இன்றைய நற்செய்தி நினைவுறுத்துகிறது: இறைவன் அழைக்கிறார், இறைவன் வியப்பளிக்கிறார், இறைவன் அன்புகூருகிறார் – திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்து உயிர்த்துவிட்டார்! இந்த சொற்களைக் கொண்டு, உங்கள் நாட்டில், கிறிஸ்தவர்கள், ஒருவரை ஒருவர் உயிர்ப்புக் காலத்தில் வாழ்த்தினர் என்பது அருமையாக உள்ளது. இன்றைய நற்செய்தி, ஆண்டவரின் மகிழ்வைப் பறைசாற்ற நம்மை அழைக்கிறது. இந்தப் பணியை ஆற்ற, இறைவன் ஆற்றும் மூன்று விடயங்களை இன்றைய நற்செய்தி நினைவுறுத்துகிறது: இறைவன் அழைக்கிறார், இறைவன் வியப்பளிக்கிறார், இறைவன் அன்புகூருகிறார்.

இறைவன் அழைக்கிறார்.

இறைவன் அழைக்கிறார். கலிலேயக்கடலின் கரையில், இயேசு பேதுருவை அழைத்தார். மீன்பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு, மனிதர்களைப் பிடிக்கும் பணிக்கு அவரை அழைத்தார். இப்போதோ, தன் போதகர் இறந்ததைக் கண்டபின், அவர் உயிர்த்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டபின், பேதுரு, அவரது பழைய வாழ்வுக்குத் திரும்புகிறார், மற்றவர்களும் அவரைப் பின்தொடர்கின்றனர். இயேசுவுக்காக, பேதுருவும், மற்ற சீடர்களும் விட்டுவிட்டு வந்த வலைகளை மீண்டும் எடுக்கின்றனர்.

இறைச்சி பாத்திரங்களைத் தேடுதல்

பழைய வாழ்வுக்குத் திரும்புவது, நம் ஒவ்வொருவருக்கும் உள்ள ஒரு பெரும் சோதனை. எகிப்திலிருந்து வெளியேறிய இஸ்ரயேல் மக்கள் மீண்டும் தங்கள் இறைச்சி பாத்திரங்களைத் தேடியதுபோல், பேதுருவும், தான் விட்டுவிட்டு வந்த வலைகளைத் தேடித் சென்றார். இறந்தகாலத்திற்குத் திரும்பிச்செல்ல நம்மைத் தூண்டும் கல்லறை மனநிலை, சுய பரிதாபத்தில் நம்மை ஆழ்த்தி, நம்பிக்கையை விழுங்கிவிடுகிறது. இவ்வேளையில், இயேசு, பேதுருவைத் தேடிச்சென்று, பொறுமையுடன், மீண்டும் துவக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறார். அவருக்கு இயேசு வழங்கிய 'பேதுரு' என்ற பெயருக்கு முன்னதாக, அவர் கொண்டிருந்த இயற்பெயரான 'சீமோன்' (யோவான் 21:15) என்ற பெயரைப் பயன்படுத்தி அவரை அழைக்கிறார்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, ஆண்டவர் நம்மை அழைப்பதற்கு ஒருபோதும் அயர்வதில்லை. அவரது அன்பு சக்தி, நம் எதிர்பார்ப்புக்களையெல்லாம் தலைகீழாக மாற்றி, மீண்டும் புதிதாகத் துவங்க எப்போதும் தயாராகிறது. அவரை நாம் வரவேற்கும் வேளையில், மென்மேலும் உயர்ந்து, ஒளிமிக்க எதிர்காலத்தை அரவணைக்க முடியும்.

இறைவன் வியப்பளிக்கிறார்.

இறைவன் வியப்பளிக்கிறார். வியப்புக்களின் ஆண்டவர் அவர். வியப்படைவது மட்டுமல்லாமல், வியப்பளிக்கும் செயல்களை ஆற்றவும் நம்மை அழைக்கிறார். இரவெல்லாம் மீன்பிடித்தும் ஒன்றும் கிடைக்காமல் இருந்த சீடர்களிடம், வழக்கத்திற்கு மாறாக, விடியற்காலையில் மீன்பிடிக்கும்படி கூறுகிறார் இயேசு. "நாங்கள் எப்போதும் இப்படித்தான் செய்துவந்துள்ளோம்" என்று கூறும் மனநிலையிலிருந்து வெளியேறி, வரலாற்றில் இன்னும் ஆழத்திற்குச் செல்லவும், அங்கு வலைகளை வீசவும், இறைவன் நம்மை அழைக்கிறார்.

இறைவன் அன்புகூருகிறார்.

வியப்பூட்டும் மூன்றாவது விடயத்தின் மீது நம் கவனத்தைத் திருப்புவோம்: இறைவன் அன்புகூருகிறார். அன்புதான் அவரது மொழி. அந்த மொழியைக் கற்றுக்கொள்ள, பேதுருவிடமும், நம்மிடமும், இறைவன் கேட்கிறார். நம்மிடம் உள்ள குறைகள் அனைத்தையும் விட, இறைவனின் அன்பு மிகப் பெரியது என்பதை உணர்வதே, கிறிஸ்தவராக இருப்பதன் பொருள்.

இந்நாட்டில், உயிர்ப்பின் சாட்சிகளாக வாழ்ந்த பலர், தங்கள் எளிய நம்பிக்கை, அன்பு ஆகியவற்றைக் கொண்டு, அற்புதமான படைப்புக்களை உருவாக்கியுள்ளனர். இந்நாட்டின் வரலாற்றில், கடந்த காலத்தில், இறைவன் செய்த அற்புதங்களை கண்கொண்டு நோக்கவும், ஏற்றுக்கொள்ளவும், அவருடன் எதிர்காலம் நோக்கி நடக்கவும், நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இளையோருக்கென நான் அண்மையில் வெளியிட்ட திருத்தூது மடலில் கூறியுள்ள ஒரு சில கருத்துக்களை இங்கு மீண்டும் சொல்ல விழைகிறேன். வயதில் அல்ல, மாறாக, தூய ஆவியாரின் அருளால் இளமையுடன் விளங்கும் திருஅவை, கிறிஸ்துவின் அன்புக்குச் சாட்சியாக வாழ அழைக்கப்பட்டுள்ளது. நுகர்வுக் கலாச்சாரத்தையும், மேம்போக்கான தன்னலத்தையும் எதிர்க்கும் அளவு, நமது அன்பு, வறியோருக்கு பணியாற்ற உதவுகிறது. (Christus Vivit, 174-175) இந்த நாட்டுக்குத் தேவைப்படும் புனிதர்களாக மாற அஞ்சவேண்டாம். புனிதத்தைக் கண்டு அஞ்சவேண்டாம். அது, உங்கள் வாழ்வுத் துடிப்பையும், மகிழ்வையும் பறித்துவிடாது. மாறாக, உங்கள் விண்ணகத் தந்தையின் விருப்பப்படி, நீங்களும், இந்நாட்டின் அனைத்து மக்களும், அவரது விருப்பத்திற்கேற்ப மாறுவீர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2019, 12:05