மாசிடோனியா சதுக்கத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலி மாசிடோனியா சதுக்கத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலி 

Skopje திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

தன்னையே பகிர்நதளிப்பதை, அன்னை தெரேசா நன்கு உணர்ந்திருந்தார். நற்கருணையிலும், எளியோரிலும் மனுவுருவானவர் இயேசு என்ற இரு தூண்களின் மேல் அவரது வாழ்வு அமைக்கப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது." (யோவான் 6:35) ஆண்டவர் இச்சொற்களைக் கூறியதை இப்போது கேட்டோம். இயேசு, அப்பங்களைப் பலுகச்செய்த நிகழ்வு, சீடர்கள் மனதில் ஆழப்பதிந்திருந்தது. இயேசுவைச் சுற்றி கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் நிகழ்ந்ததை சிறிது கற்பனை செய்துபார்ப்போம். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க கூடியிருந்த அம்மக்கள், உடன்பிறந்த உணர்வுடன், அங்கு நிகழ்ந்த பகிர்வை, தங்கள் கரங்களால் தொட்டுப்பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

குறுகியப் பார்வையைத் தாண்டி...

நம் மந்தமான எதிர்பாப்புக்களையும், மேலோட்டமான சிந்திக்கும் திறனையும், கணக்குப் பார்க்கும் குறுகியப் பார்வையையும் தாண்டி, இறைவன் இவ்வுலகிற்கு வாழ்வளிக்க வந்தார். அவர் தந்த அப்பத்தை உண்டவர்கள், இறைவனுக்காகவும், உடன்பிறந்த நிலைக்காகவும், பகிர்ந்தளிக்கும் விருந்துக்காகவும் பசித்திருந்தனர்.

பொருளற்ற தகவல்கள் என்ற நாள்பட்ட அப்பத்தை உண்பதற்கும், மதிப்பிழந்து சிறைப்படுவதற்கும் நாம் பழகிவிட்டோம். ஊரோடு ஒத்து வாழ்வது, நம் பசியையும், தாகத்தையும் தீர்க்கும் என்று எண்ணினோம். விரைவான முடிவுகளை எதிர்பார்த்து, பொறுமையிழந்து, தவிப்புற்றோம். மெய்நிகர் உண்மைகளில் சிறைப்பட்டு, உண்மைகளைச் சுவைக்கத் தவறினோம்.

"ஆண்டவரே, நாங்கள் பசித்திருக்கிறோம்"

இப்போது, "ஆண்டவரே, நாங்கள் பசித்திருக்கிறோம்" என்று, இறைவனிடம் துணிவுடன் கூறுவோம். அப்பம் பலுகியதைக் கண்ட மக்களைப்போல், உமது இரக்கம் பலுகுவதைக் காண நாங்கள் பசித்திருக்கிறோம். உமது வார்த்தைகள் என்ற அப்பத்திற்காகவும், உடன்பிறந்த உணர்வு என்ற அப்பத்திற்காகவும் நாங்கள் பசித்திருக்கிறோம்.

வாழ்வுதரும் அப்பத்தை உண்பதற்கு இன்னும் சிறிது நேரத்தில் நாம் பீடத்தை நெருங்கிச் செல்வோம். "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" (யோவான் 6:35) என்று ஆண்டவர் தந்த அழைப்பிற்கு செவிமடுத்து, நாம் பீடத்தை நெருங்கிச் செல்கிறோம். "வாருங்கள்" என்று இறைவன் அழைக்கிறார். இறைவனைப் பொருத்தவரை, 'வாருங்கள்' என்று அவர் சொல்வது, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது அல்ல, மாறாக, ஒரு மனநிலையிலிருந்து, மற்றொரு மனநிலைக்குச் செல்வதைக் குறிக்கிறது, மனமாற்றம் நோக்கிச் செல்வதைக் குறிக்கிறது.

அன்னை தெரேசா வாழ்வின் இரு தூண்கள்

ஒவ்வொரு திருப்பலியிலும், ஆண்டவர் தன்னையே பிட்டு நமக்கு வழங்குகிறார். நம்மையே பிறருக்குப் பகிர்ந்தளிக்க அவர் அழைக்கிறார். இதை, அன்னை தெரேசா நன்கு உணர்ந்திருந்தார். நற்கருணையிலும், எளியோரிலும் மனுவுருவானவர் இயேசு என்ற இரு தூண்களின் மேல் அவரது வாழ்வு அமைக்கப்பட்டது.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த இயேசு இன்றும் நம்மிடையே, நம் அன்றாட வாழ்வின் நடுவே வலம்வருகிறார். நமது பசியை நன்கு உணர்ந்த அவர், நமக்குக் கூறுவது இதுதான்: "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது." (யோவான் 6:35). அவரது அளவுகடந்த அன்பை உணர்வதற்கு நாம் ஒருவர் ஒருவரைத் தூண்டுவோம். திருப்பலிப் பீடம் என்ற அருளடையாளத்திலும், சகோதரர்கள், சகோதரிகள் என்ற அருளடையாளத்திலும், நம் பசியைப் போக்கி, தாகத்தைத் தணிக்க அவருக்கு அனுமதியளிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2019, 15:47