பல்கேரியாவில் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பல்கேரியாவில் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை 

பல்கேரியாவில் திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

கீழைவழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபைகளின் பாரம்பரியங்களை மதித்து ஏற்பதை, பல்கேரியாவில் கற்றுக்கொண்ட புனிதத் திருத்தந்தை 23ம் ஜான், ஏனைய மதங்களுடனும் நல்லுறவை வளர்த்துக் கொண்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

‘கிறிஸ்து உயிர்த்துவிட்டார். உண்மையில் உயிர்தெழுந்துவிட்டார்’. இந்த வார்த்தைகளுடனேயே பல்கேரியாவின் ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்க விசுவாசிகள் துவக்க காலங்களில் உயிர்ப்பு கால வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்து உயிரோடு இருக்கிறார். நீங்களும் உயிரோட்டமுள்ளவர்களாக இருக்க விரும்புகிறார். அவர் உங்களுக்குள், உங்களோடு இருக்கிறார். உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். நீங்கள் கவலைகளாலும், அச்சத்தாலும், சந்தேகங்களாலும், தோல்விகளாலும் தளர்வுறும்போது, உங்கள் பலத்தையும் நம்பிக்கைகளையும் மீட்டுத்தரும் வகையில் இயேசு அங்கு இருப்பார். இறந்தோரிடமிருந்து உயிர்த்த கிறிஸ்துவின் மீதான இந்த நம்பிக்கை, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, பல்லாயிரம் மறைப்பணியாளர்களின் தியாகம் நிறைந்த பணிகளால் பரவியுள்ளது.

திருஅவையிலும், பல்கேரியாவிலும், புனிதம் நிறைந்த தங்கள் வாழ்வால் அறியப்பட்ட மேய்ப்பர்கள் பலர் உள்ளனர். உங்களால் 'பல்கேரிய புனிதர்' என அழைக்கப்படும் புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை இங்கு நினைவுகூர்கிறேன். கீழைவழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபைகளின் பாரம்பரியங்களை மதித்து ஏற்பதை இங்கு கற்றுக்கொண்ட இப்புனிதர், ஏனைய மதங்களுடனும் நல்லுறவை வளர்த்துக்கொண்டார்.  இந்நாட்டில் அவர் பெற்ற அனுபவமே, அவரை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டவும், அதில் கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கவும் தூண்டியது. இத்தகைய ஒரு தூண்டுதலுக்கு காரணமாக இருந்த இந்த பூமிக்கு நாம் நன்றிகூற வேண்டும்.

இந்த கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்தில், விரைவில், பல்கேரிய கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளேன். இது, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நாடாக இருக்கின்ற போதிலும், பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மற்றும் மதங்கள் சந்தித்து கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நாடாகவும் அமைந்துள்ளது. இத்தகையச் சந்திப்பின் நாடாக எப்போதும் செயல்பட, தேவையானத் தூண்டுதலை அது பெறவேண்டும் என, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி செபிப்போம். புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்த 'வானக வாயில்' என்ற பெயர் கொண்ட Nessebar அன்னைமரியாவை நோக்கி, அல்லேலூயா வாழ்த்தொலி செபத்தின் வார்த்தைகளுடன் நம் வேண்டுதலை முன் வைப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2019, 12:15