சமுதாய இயல் பாப்பிறைக் கழகத்தினருடன் திருத்தந்தை சமுதாய இயல் பாப்பிறைக் கழகத்தினருடன் திருத்தந்தை 

திறந்த மனம் கொண்ட அரசுகளே இன்று நமக்குத் தேவை

அரசு, அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவதை விடுத்து, ஒரு சில அதிகார வர்க்கங்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டும்போது, கருத்தியல் சுவர்கள் எழுகின்றன - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு நாடுகளின் அரசுகள், தங்களை ஒரு குறிப்பிட்ட இனத்தைக் கொண்டு அடையாளப்படுத்தி வருவது, பல்வேறு மோதல்களுக்கு காரணமாக அமைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு பன்னாட்டுக் குழுவினரிடம் கூறினார்.

சமுதாய இயல் பாப்பிறைக் கழகம், மே 1ம் தேதி முதல் 3ம் தேதி முடிய, உரோம் நகரில் நடத்திவரும் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் பங்கேற்றுவரும் உறுப்பினர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, "நாடு, அரசு, நாட்டு-அரசு" என்ற தலைப்பில் அவர்கள் மேற்கொண்டு வரும் விவாதங்கள் இன்றைய உலகிற்கு முக்கியமான ஒரு தலைப்பு என்று கூறினார்.

ஒவ்வொரு நாட்டு மக்களும் அவர்களது மண்ணின் கலாச்சாரத்தில் வேரூன்றி இருப்பதை, திருஅவை ஊக்குவித்து வரும் அதேவேளையில், அம்மக்களின் நாட்டுப்பற்று, மற்ற மக்களை வெறுத்து ஒதுக்குவதற்கு இடம்தரக்கூடாது என்பதையும் திருஅவை வலியுறுத்தி வருகிறது என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு நாட்டிலும் பணியாற்றும் அரசு, அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவதை விடுத்து, ஒரு சில அதிகார வர்க்கங்களுக்கு மட்டும் பணிந்து, அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டும்போது, கருத்தியல் சுவர்கள் எழுப்பப்படுவதும், அந்நியரை வரவேற்காமல் இருப்பதும் நிகழ்கின்றன.

மக்கள் நாடுவிட்டு நாடு குடிபெயரும் போக்கு உலகெங்கும் பரவியுள்ள இன்றையக் காலக்கட்டத்தில், மனிதர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள மாண்பை அடிப்படையாகக் கொண்டு, திறந்த மனதோடு அமைக்கப்படும் அரசுகளே இன்று நமக்குத் தேவை என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

உலக சமுதாயத்தைப் பிரிக்கும் சக்திகளை முதன்மைப்படுத்தும் அரசுகளின் போக்கிற்கு ஒரு மாற்றாக, நாடுகளுக்கிடையே நிலவவேண்டிய ஒற்றுமை, கூட்டுறவு ஆகிய கருத்துக்களை வலியுறுத்தி தங்கள் ஆண்டுக் கூட்டத்தை நடத்தி வரும் சமுதாய இயல் பாப்பிறைக் கழக உறுப்பினர்களை திருத்தந்தை தன் உரையில் பாராட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2019, 14:56