பல்கேரிய அரசுத்தலைவரின் வரவேற்புரை பல்கேரிய அரசுத்தலைவரின் வரவேற்புரை 

பல்கேரிய அரசுத்தலைவரின் வரவேற்புரை

பல்கேரியா, போர்களும், துன்பங்களும் நிறைந்த வரலாற்றைக் கொண்டது. இதனாலேயே அமைதியின் விலையை அந்நாட்டினரால் உணர முடிகிறது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பல்கேரிய குடியரசுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருக்கும் திருத்தந்தையே, தங்களுக்கு எமது இனிய வரவேற்பு. பழமையான கிறிஸ்தவ நாடுகளில் ஒன்றான பல்கேரியா, 12 நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்தவ விசுவாசத்தைத் தழுவியது. இந்த நாடு, தனது அறநெறி மற்றும் ஆன்மீக நற்பண்புகளாலும், திருஅவை மற்றும் சிரில் அவர்கள் உருவாக்கிய எழுத்துக்களாலும், விசுவாசம் மற்றும் அறிவாலும், அனைத்து சோதனைகள் மற்றும், ஏற்றத்தாழ்வுகளிலிருந்து வெளிவந்துள்ளது. ‘இந்த நம் பூமிக்கு அமைதி உண்டாகட்டும்’ என்பது, இத்திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்காகும். கடவுளின் ஞானம் என்ற பெயரையே கொண்டுள்ள பல்கேரியத் தலைநகரிலிருந்து, இந்த உலகெங்கும் அமைதிக்கான அழைப்பு எதிரொலிக்கின்றது. எமது நாடு, போர்களும், துன்பங்களும் நிறைந்த வரலாற்றைக் கொண்டது. இதனாலேயே அமைதியின் விலையை எம்மால் அறிய முடிகிறது. பல்வேறு மத, இன மற்றும் நாடுகளுக்கு இடையே,     மனிதமும், சகிப்புத்தன்மையும் நிலவினால் மட்டுமே அமைதி இயலக்கூடியது. திருத்தந்தையே, தங்களின் உயிர்ப்புப் பெருவிழா செய்தியில், சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டி எழுப்புங்கள் எனக் கேட்டுக்கொண்டீர்கள்.

9ம் நூற்றாண்டில், புனித மேரி மேஜர் பசிலிக்காவில், திருத்தந்தை 2ம் ஏட்ரியன் அவர்கள், பல்கேரிய எழுத்துக்களைப் புனிதப்படுத்தினார். புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், பல்கேரிய திருத்தந்தை என சிலரால் அழைக்கப்படுகிறார். இவர், சோஃபியாவில், பத்தாண்டுகள் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.

திருத்தந்தையே, இக்காலத்தில், வெறுப்பும், அந்நியர் மீது காழ்ப்புணர்வும் ஐரோப்பாவில் மீண்டும் நுழைந்துள்ளன. தங்களின் சொந்த மொழிகளில் கடவுளை மகிமைப்படுத்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்பதே உறுதிப்படுத்துவதே, புனித உடன்பிறப்புகள் சிரில் மற்றும் மெத்தோடியஸின் பெரிய மறைப்பணியாக அமைந்திருந்தது. 

திருத்தந்தையே, தங்களது பல்கேரியப் பயணம், நம் உறவுகளின் புதிய வரலாற்றில், மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில், அமைதி மற்றும் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பாதுகாப்பது குறித்து நாம் கருத்தாய் இருக்கின்றோம். அமைதியான, நியாயமான மற்றும் மனிதம் நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவதற்கு, பல்கேரிய மக்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும் சான்றாக, இத்திருத்தூதுப் பயணம் அமைந்துள்ளது.

இவ்வாறு தனது வரவேற்புரையை நிறைவு செய்தார், பல்கேரிய அரசுத்தலைவர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2019, 13:51