ருமேனிய ஆர்த்தடாக்ஸ் ஆயர் பேரவையில் திருத்தந்தை பிரான்சிஸ் ருமேனிய ஆர்த்தடாக்ஸ் ஆயர் பேரவையில் திருத்தந்தை பிரான்சிஸ் 

ருமேனிய ஆர்த்தடாக்ஸ் ஆயர் பேரவையில் திருத்தந்தை உரை

உரோமைய ஆயர் ருமேனியாவுக்கு முதல் முறையாக வந்தபோது, 'இணையுங்கள், இணையுங்கள்!' என்று மக்கள் தன்னிச்சையாக புக்காரெஸ்ட் நகரில் எழுப்பிய குரலை நாம் மறக்க இயலாது – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வணக்கத்திற்குரிய ஆயர் குலத்தலைவரே, ஆயர் பேரவையின் உறுப்பினர்களே, கிறிஸ்து உயிர்த்துவிட்டார்! நமது திருஅவைகளுக்கு வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும் திருத்தூதர் படிப்பினைகளின் இதயமாக விளங்குவது, ஆண்டவரின் உயிர்ப்பே. உயிர்ப்பு நாளன்று, உயிர்த்த ஆண்டவரைக் கண்டதில் திருத்தூதர்கள் மகிழ்ந்தனர். அந்த ஆண்டவரின் பிம்பத்தை உங்களில் காண்பதில் நான் மகிழ்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன், திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், "கிறிஸ்துவின் முகம் உங்கள் திருஅவையின் மீது பதிந்துள்ளதை தியானிக்க நான் வந்துள்ளேன்; துன்புறும் முகத்தை வணங்க வந்துள்ளேன்" என்று, இந்தப் புனிதப் பேரவையின் முன் கூறினார். நானும் அந்த ஆண்டவரின் முகத்தை, என் சகோதரர்கள் முகத்தில் காண்பதற்கு ஒரு திருப்பயணியாக வந்துள்ளேன்.

அந்திரேயாவும், பேதுருவும்

திருத்தூதர்களான பேதுருவும், இந்நாட்டிற்கு கிறிஸ்தவ நம்பிக்கையைக் கொணர்ந்த அந்திரேயாவும் இரத்த உறவில் உடன்பிறந்தோராய் இருந்ததுபோல், தங்கள் இரத்தத்தைச் சிந்தியதிலும் சகோதரர்களாய் இருந்தனர். இரத்தம் சிந்துதலில் ஏற்படும் உடன்பிறந்த தன்மை, நமது பயணத்தில் துணை வருகிறது.

இந்நாட்டிலும், உலகின் பல்வேறு இடங்களிலும், எத்தனையோ மகன்கள், மகள்கள் வழியே, பாஸ்காவின் இறப்பு, உயிர்ப்பு இரண்டும் இன்று தொடர்கின்றது. அவர்கள் செய்த தியாகங்கள், நாம் போற்றி பாதுகாக்க வேண்டிய கருவூலங்கள். நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி (உரோமையர் 6:4) கிறிஸ்துவின் பாடுகளிலும், உயிர்ப்பிலும் அவர்கள் பங்குபெற்றனர்.

'இணையுங்கள், இணையுங்கள்!'

வணக்கத்திற்குரிய அன்பு சகோதரரே, இருபது ஆண்டுகளுக்கு முன், நமது முன்னோர் மேற்கொண்ட சந்திப்பு, உயிர்ப்பின் கொடையாக அமைந்தது. ஆர்த்தடாக்ஸ் சபையினரை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டிற்கு, உரோமைய ஆயர் முதல் முறையாக வந்தபோது, 'இணையுங்கள், இணையுங்கள்!' என்று மக்கள் தன்னிச்சையாக புக்காரெஸ்ட் நகரில் எழுப்பிய குரலை நாம் மறக்க இயலாது. மக்கள் எழுப்பிய குரல் வெளிப்படுத்திய நம்பிக்கை, புதியதொரு பயணத்தைக் துவக்கி வைத்தது.

நினைவுகளின் சக்தியுடன் இணைந்து பயணிக்க. நம்மிடையே எழுந்த தவறுகள், முற்சார்பு எண்ணங்கள், தீர்ப்புக்கள் ஆகியவற்றின் நினைவுகள் அல்ல, மாறாக, நமது வேர்களின் நினைவுகள். நமது வேர்கள், பல்வேறு திசைகளில் வளைந்து நெளிந்து சென்றாலும், உறுதியாக, நலம் மிக்கதாக விளங்குவதற்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம். உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! என்று கூறும் திருப்பாடல் ஆசிரியரைப்போல், நாமும் இறைவன் நம்மிடையே செய்த நன்மைகளுக்காக நன்றி கூறுகிறோம் (காண்க. தி.பா. 77:6,12-13)

ஆண்டவருக்குச் செவிமடுத்து, இணைந்து பயணிக்க. எம்மாவு சென்ற சீடர்களோடு இணைந்து நடந்த ஆண்டவர் நமக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். தங்கள் கவலைகளையும், கேள்விகளையும் கூறிய சீடர்களுக்கு பொறுமையுடன் செவிமடுத்த ஆண்டவர், அவர்களோடு மேற்கொண்ட உரையாடல் வழியே அவர்கள் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவினார். (காண்க. லூக்கா 24:15-27)

பல்வேறு சமுதாய, கலாச்சார மாற்றங்கள் உருவாகியுள்ள அண்மையக் காலங்களில், நாம் இணைந்து, ஆண்டவருக்கு செவிமடுக்கும் தேவை உள்ளது. தன்னலத்தையும், 'வெறுப்புக் கலாச்சாரத்தையும்' தூண்டி விடும் இன்றைய உலகில், உறவுகளை வளர்ப்பதும், உரையாடல்களை மேற்கொள்வதும் அவசியம்.

எம்மாவு பயணம், ஆண்டவரே, எம்மோடு தங்கும் (காண்க, லூக். 24:28-29) என்ற மன்றாட்டுடன் முடிந்தது. அப்பத்தைப் பகிர்வதில் ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தினார் (காண்க. 30-31). இப்பயணம், நம்மை, பிறரன்பு, பணி, 'இறைவனைப் பற்றி பேசுவதற்கு' முன், 'இறைவனை வழங்குதல்' ஆகியவற்றிற்கு அழைக்கிறது.

ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், கத்தோலிக்க மறைமாவட்டங்களுக்கும் இடையே நிலவும் கூட்டுறவு முயற்சிகள், நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளதைக் காண்கிறோம். இந்த முயற்சிகள், நம்மை அந்நியராக அல்லாமல், உடன்பிறந்தோராகக் காண்பதற்கு உதவி செய்துள்ளன.

ஒரு புதிய பெந்தக்கோஸ்து நோக்கி இணைந்து பயணிக்க. இருபது ஆண்டுகளுக்கு முன், இங்கு உருவான பாஸ்கா ஒன்றிப்பின் உதயம், நம்மை புதிய பெந்தக்கோஸ்து நோக்கி அழைத்துச் செல்லும் பாதையாக அமைந்துள்ளது. கிறிஸ்துவின் உயிர்ப்பில் கொண்டுள்ள நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டுள்ள கொண்டு நமது பயணம் தொடர்கிறது. உயிர்ப்பிலிருந்து, பெந்தக்கோஸ்து வரை, இறைவனின் புனித அன்னை வழங்கிய பாதுகாப்புடன் இணைந்து செபிக்கும் காலம். நாம் இணைந்து வருவதற்கு நமக்குள் உருவாகியுள்ள தயக்கத்தை, தூய ஆவியாரின் நெருப்பு அழித்துவிட்டு, நாம் இணைந்து நடக்க உதவுவாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2019, 15:37