ருமேனியா அரசுத்தலைவர் மாளிகையில் அதிகாரிகளுக்கு  உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் ருமேனியா அரசுத்தலைவர் மாளிகையில் அதிகாரிகளுக்கு உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  

ருமேனியா அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை

ஏழைகள், பலவீனர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோர் என எவரும் தனிமைப்படுத்தப்படாத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் பாதையில் நடைபோடட்டும் ருமேனியா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ருமேனியா நாட்டின் அரசுத்தலைவரே, அரசு அதிகாரிகளே, பெரியோரே, பெண்மணிகளே,

ருமேனியா நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தேங்கவைக்கவும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரிந்து நிற்கவும், சமூக மற்றும் மத சுதந்திரங்கள் பறிக்கப்படவும் காரணமான அடக்குமுறை ஆட்சியிலிருந்து ருமேனியா சுதந்திரமடைந்த பின், கடந்த 30 ஆண்டுகளில், சக்திமிக்க மக்களாட்சி கொள்கைகளுடன், முன்னேறிவருகிறது. பல்வேறு சிரமங்கள் மத்தியிலும், இந்நாடு, சமூக, அரசியல் பன்முகத் தன்மைகளாலும், ஒருவர் மற்றவருடன் கொள்ளும் கலந்துரையாடல்களாலும், மத சுதந்திரம் மதிக்கப்படுவதன் வழியாகவும், அனைத்துலக அளவில் மேற்கொள்ளப்படும் முழுமையான பங்கேற்பின் வழியாகவும் முன்னேறி வருவது குறித்து என் பாராட்டுக்களை வெளியிடுகிறேன்.

ருமேனியா எதிர்கொண்ட சிரமங்கள்

ஒரு புதிய காலத்தின் துவக்கத்தை இம்மாற்றங்கள் கொணர்ந்துள்ளபோதிலும், சமுதாயத்தில் நிலையானத் தன்மையை உருவாக்கும் பாதையில் எதிர்கொள்ளப்பட்ட சிரமங்களையும் நாம் மறக்கமுடியாது. முதல் பிரச்னையாக நாம் நோக்குவது, குடியேற்றதாரர் குறித்தது. பல இலட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்புக்களையும் வளமான வாழ்வையும் தேடி, வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். இவர்கள், தங்களின் தனிப்பட்ட கலாச்சாரம், மற்றும், கடின உழைப்பு வழியாக, தாங்கள் குடியேறியுள்ள நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தங்கள் சொந்தநாட்டில் வாழும் உறவினர்களுக்கு பொருளுதவி செய்வதன் வழியாகவும் ஆற்றிவரும் பணிகளுக்கு, பாராட்டுக்களை வெளியிடுகிறேன்.

குடும்பங்கள் பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படும் இந்த குடிபெயர்தல் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்தில், அரசியல், பொருளாதார, சமூக, மற்றும், ஆன்மீக சக்திகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். மக்களின் பொதுநலனை மனதில் கொண்டு, முன்னோக்கி நடைபோட வேண்டியது, இங்கு அத்தியாவசியமாகிறது.

அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பாதை இது. ஏழைகள், பலவீனர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோர் என, எவரையும் தனிமைப்படுத்தாத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் பாதை இது. மனிதரின் முக்கியத்துவம், மற்றும், மனிதரின் மீறமுடியாத உரிமைகள் குறித்த  விழிப்புணர்வுடன் இப்பாதையில் நடைபோட வேண்டும்.

ஒருவர் ஒருவருடன் கொள்ளும் ஒத்துழைப்புடனும், நட்புணர்வுடனும், இறைப்பணியின் சான்றாகவும் செயல்படும் திருஅவை, மனித மாண்பு, மற்றும், பொது நலப்பணிகளில் சமூகத் தலைவர்களுடன்  இணைந்து பணியாற்ற எப்போதும் தயாராக உள்ளது.

ஒருங்கிணைந்த கல்வி, பிறன்பு நடவடிக்கைகள் ஆகியவை வழியே உதவுவதுடன், அழகிய ருமேனியா நாட்டைக் கட்டியெழுப்ப கை கொடுக்கும் கத்தோலிக்கத் திருஅவை, சமூக, மற்றும் ஆன்மீக வாழ்விற்கு பங்காற்றி வருகிறது.

ருமேனியா நாடு, வளத்தையும் அமைதியையும் பெற இறைவனிடம் வேண்டி, அனைவருக்கும் இறை ஆசீரை வழங்குகிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2019, 15:28