தேடுதல்

Vatican News
திருப்பீடத்தில் பணியாற்ற நியமனம் பெற்றுள்ள புதிய தூதர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பீடத்தில் பணியாற்ற நியமனம் பெற்றுள்ள புதிய தூதர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

புதிதாகப் பொறுப்பேற்கும் தூதர்களைச் சந்தித்த திருத்தந்தை

இவ்வுலகம், பல சிக்கலான பிரச்சனைகளைச் சந்திக்கும் இவ்வேளையில், உடன் பிறந்த உணர்வை வளர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை, அரசுகளும், அரசு அதிகாரிகளும் உணர்வது மிகவும் அவசியம் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகின் பொதுவான நலனுக்காக உழைப்பதிலும், நலிவுற்ற சகோதரர், சகோதரிகளுக்கு உதவி செய்வதிலும் அக்கறை கொண்டுள்ள, பல நாடுகளை தான் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டுத் தூதர்களிடம் கூறினார்.

தாய்லாந்து, நார்வே, நியூ சிலாந்து, சியேரா லியோன், கினி, கினி-பிஸ்ஸோ, லக்ஸம்பர்க், மொசாம்பிக் மற்றும் எத்தியோப்பியா ஆகிய 9 நாடுகளின் தூதர்களாக வத்திக்கானில் பணியாற்ற வந்திருக்கும் அதிகாரிகளின் நியமனச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தூதர்களுக்கு வழங்கிய உரையில், அந்நாட்டு மக்களையும், தலைவர்களையும் தான் வாழ்த்துவதாகக் கூறினார்.

இவ்வுலகம், பல சிக்கலான பிரச்சனைகளைச் சந்திக்கும் இவ்வேளையில், உடன் பிறந்த உணர்வை வளர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை, அரசுகளும், அரசு அதிகாரிகளும் உணர்வது மிகவும் அவசியம் என்று, திருத்தந்தை, தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

நாம் ஒன்றிணைந்து, நல்லுறவுடன் வாழ்வதற்கு, மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, நம்மிடையே வளர்ந்துவரும் ஆயுதம் தாங்கிய மோதல்களும், வன்முறைகளும் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி நமக்கு சாத்தியம் என்ற உண்மையை, இத்தகையப் பிரச்சனைகள், நமக்கு, மீண்டும், மீண்டும் உணர்த்துகின்றன என்று கூறினார்.

தங்கள் பணியைத் துவக்கும் தூதர்களுக்கு, திருப்பீடத்தின் அனைத்து அலுவலகங்களும் ஒத்துழைப்பை வழங்கும் என்பதையும், பணியாற்ற வந்திருக்கும் தூதர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் தன் ஆசீரை வழங்குவதாகவும் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

23 May 2019, 14:17