அல்லேலூயா வாழ்த்தொலி உரை அல்லேலூயா வாழ்த்தொலி உரை 

துன்புறும் மக்களில் இயேசுவின் காயத்தை காண அழைப்பு

திருத்தந்தை : இயேசுவின் காயங்கள் வழி நமக்குக் கிடைக்கும் அமைதி, மற்றும், மகிழ்வுடன், நற்செய்தியை அறிவிக்கும் அழைப்பும் ஒரு கொடையாக கிடைக்கின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் வானொலி

உள்ளத்தில் அமைதியைத் தேடி அலைபவர்கள் ஒவ்வொருவரும் முன்னே வந்து என் காயங்களைத் தொட்டுப்பாருங்கள் என இயேசு நம்மை நோக்கி அழைப்பு விடுக்கிறார் என, இஞ்ஞாயிறு, அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 28, கொண்டாடப்பட்ட இறை இரக்கத்தின் ஞாயிறன்று, புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என் காயங்களில் உன் விரலை இடு என புனித தோமாவை நோக்கி இயேசு கூறியதை விவரிக்கும் இந்நாளின் நற்செய்தியை மையமாக வைத்து, தன் உரையை வழங்கினார்.

நம்முடைய துன்பகரமான வேளைகளில், நாம் சித்ரவதைகளை அனுபவிக்கும்போது, துன்புறும் மனிதர்களைக் கண்டு மனம் வருந்தும்போது, நாம் இயேசுவின் காயத்தை நோக்கி அழைக்கப்படுகிறோம் என்பது, அந்த காயத்தின் அடையாளமாக இருக்கும் துன்புறும் மக்களை சந்திக்க  அழைக்கப்படுவதேயாகும் என்றார் திருத்தந்தை.

நம் ஒவ்வொருவருக்கும் இரக்கம் தேவைப்படுகிறது, அந்த இரக்கத்தை நாம் இயேசுவின் காயங்களிலிருந்தே பெறமுடியும் என்பதால், துன்புறும் நம் சகோதரர்களில் காணப்படும் காயங்களை நோக்கிச் செல்வோம் என்ற அழைப்பை முன்வைத்தார் திருத்தந்தை.

அவர் ஏற்ற காயங்களுடன், தந்தையாம் இறைவன் முன்னே அமர்ந்து, நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கும் இயேசுவை நோக்கும் நாம், அவரின் காயங்களை மறக்காதிருப்போம் என, அனைவருக்கும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் காயங்கள் வழி நமக்குக் கிடைக்கும் அமைதி, மற்றும், மகிழ்வுடன், நற்செய்தியை அறிவிக்கும் அழைப்பும் ஒரு கொடையாக கிடைக்கின்றது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசத்துடன் இயேசுவை அணுகி, அமைதிக்கும், மகிழ்வுக்கும், பணி வாழ்வுக்கும் நம் இதயங்களைத் திறப்போம் என விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 April 2019, 13:00