தேடுதல்

வெல்லெத்ரி சிறைக் கைதிகளின் காலடிகளைக் கழுவி முத்தமிடும் திருத்தந்தை பிரான்சிஸ் வெல்லெத்ரி சிறைக் கைதிகளின் காலடிகளைக் கழுவி முத்தமிடும் திருத்தந்தை பிரான்சிஸ் 

நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?

12 கைதிகளின் காலடிகளைக் கழுவி, அதனை துடைத்து முத்தமிட்டு, ஒவ்வொருவரையும் கனிவுடன் உற்று நோக்கிச் சென்ற திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உரோம் நகருக்கு அருகேயுள்ள வெல்லெத்ரி சிறைக்குச் சென்று, அங்குள்ள சிறைக் கைதிகளுள் 12 பேரின் காலடிகளைக் கழுவி, இப்பெரிய வியாழன் புனிதச் சடங்கை நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வியாழன் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு வெல்லெத்ரி சிறைக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்குள்ள சிறைத்துறை அதிகாரிகளை வாழ்த்தியபின், 5 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி, 12 கைதிகளின் காலடிகளைக் கழுவினார்.

காலடிகள் கழுவப்பட்ட கைதிகளுள், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 9 பேரும், பிரேசில், ஐவரி கோஸ்ட், மொரோக்கோ ஆகிய நாடுகளிலிருந்து ஒருவர் வீதமும் இருந்தனர்.

'நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?' என்ற வாகங்கள் எழுதியதாக பரிசளிக்கப்பட்ட துண்டை மேலே போர்த்தியவராக, 12 கைதிகள் ஒவ்வொருவரின் வலது காலை கழுவி, அதனை துடைத்து, பின் முத்தமிட்டு, ஒவ்வொருவரையும் கனிவுடன் உற்று நோக்கிச் சென்றார் திருத்தந்தை. அனைவருடனும் கை குலுக்கிய திருத்தந்தை, சிலருடன் சில வார்த்தைகளும் பேசினார்.

இத்திருப்பலியின்போது, திருத்தந்தையும் தன் கையால் பல கைதிகளுக்கு திருநற்கருணை வழங்கினார். திருப்பலியின் இறுதியில்,  சில கைதிகள் முன்வந்து, தாங்கள் உருவாக்கிய சில பொருட்களை, திருத்தந்தைக்கு பரிசாக வழங்க, அனைத்துக் கைதிகளும் கைதட்டி ஆரவாரம் செய்து, தங்கள் நன்றியை வெளியிட்டனர்.

1991ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த வெல்லெத்ரி சிறையில், 577 சிறைக்கைதிகள் உள்ளனர். இதில் 60 விழுக்காட்டினர் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2019, 12:33