2019.04.27 Presidenti Unione Province Italia 2019.04.27 Presidenti Unione Province Italia 

நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதில் கவனம் தேவை

இத்தாலிய மாநிலங்களின் நீடித்த நிலையான வளர்ச்சிக்காக ஆற்றப்பட்டுவரும் நடவடிக்கைகள், துணிச்சலுடனும், மனஉறுதியுடனும் தொடர்ந்து ஆற்றப்படுவதற்கு திருத்தந்தை வாழ்த்து

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நீடித்த நிலையான வளர்ச்சிக்கும், இப்பூமியாகிய நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கும், இத்தாலிய ஒன்றிணைந்த மாநிலங்கள் அமைப்பின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஆற்றிவரும் பொதுநலப் பணிகளைப் பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய ஒன்றிணைந்த மாநிலங்கள் அமைப்பின் (UPI) ஏறத்தாழ நூறு பேரை, ஏப்ரல் 27, இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதுகாப்பான பள்ளிகள், குடிமக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான சாலைகள், எந்த ஒரு வளர்ச்சிக்கும் முக்கியமாக அமைந்துள்ள காரியங்கள் போன்றவை குறித்து நீங்கள் நன்றாக அறிந்துள்ளீர்கள் என்றும் கூறினார்.

இத்தாலியின் அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் இந்த அமைப்பு, இத்தாலிய மண்வளத்தைப் பாதுகாப்பதற்கு, குறிப்பாக, நிலநடுக்க அச்சுறுத்தல் உள்ள பகுதிகள், பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை இணைக்கும் சாலைகள், நடுத்தரப் பள்ளிகள் நிர்வாகம், அவற்றின் பாதுகாப்பு போன்ற பொதுவான நற்பணிகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதையும் குறிப்பிட்டார், திருத்தந்தை.

இத்தாலிய மாநிலங்களில் ஆற்றப்படும் உள்கட்டமைப்புப் பணிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் வளங்களுக்குச் சேதம் வருவிக்காத விதத்திலும்,  நிலப்பரப்புகள், தாறுமாறாகச் சுரண்டப்படாமலிப்பதிலும் கவனம் செலுத்துமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவையில் இருப்போருக்கு உதவுவதற்கென, அப்போஸ்தலிக்க தர்மச் செயல் அலுவலகத்திற்கு, இத்தலைவர்கள் தாராள மனதுடன் வழங்கியுள்ள உதவிக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, பல்வேறு துறைகளில், மிக நவீன தொழில்நுட்பங்களால் இடம்பெறும் வளர்ச்சிப் பணிகளையும், அறிவியல் ஆய்வுகளையும் இக்காலத்தில் காண முடிகின்றது என்றும் உரைத்தார்.

இந்த அறிவியல், தொழில்நுட்ப மற்றும் தனிநபர்களின் முன்னெடுப்புகள், சமுதாயம் மற்றும் தனியாள்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்குத் திறனைக் கொண்டுள்ளன, அதேநேரம், இவை, சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களின் அவசரத் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும் தெரிகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.

இத்தாலிய மாநிலங்களின் நீடித்த நிலையான வளர்ச்சிக்காக ஆற்றப்பட்டுவரும் நடவடிக்கைகளை, துணிச்சலுடனும், மனஉறுதியுடனும் தொடர்ந்து ஆற்றுமாறும், இந்த அமைப்பின் தலைவர்களுக்காகத் தான் செபிப்பதாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2019, 15:42