புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், குருத்தோலை பவனியில், திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், குருத்தோலை பவனியில், திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

ஏப்ரல் 14, ஞாயிறு காலை 10 மணிக்கு குருத்தோலை திருவழிபாடு

நம் பலவீனங்களோடு ஆண்டவரிடம் திரும்பி வந்தால், ஒருபோதும் தளர்வுறாத வாழ்வை நாம் தழுவிக்கொள்வோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நம் பலவீனங்களோடு ஆண்டவரிடம் திரும்பி வந்தால், அன்பின் வழியைத் தேர்ந்துகொண்டால், ஒருபோதும் பொலிவுகுன்றாத வாழ்வை நாம் தழுவிக்கொள்வோம் என்றும், அத்தகைய வாழ்வில் மகிழ்வை அனுபவிப்போம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 13, இச்சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தனது டுவிட்டர் பக்கத்தில், ஒன்பது மொழிகளில், தன் தவக்கால சிந்தனையை, இச்சனிக்கிழமையன்று பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஏப்ரல் 14, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், குருத்தோலை திருப்பவனியையும், ஆண்டவரின் திருப்பாடுகள் திருப்பலியையும் நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், பகல் 12 மணிக்கு, மூவேளை செப உரையும் நிகழ்த்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்குருத்தோலை ஞாயிறன்று, 34வது உலக இளையோர் நாள், உலகளாவியத் திருஅவையில், மறைமாவட்ட அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 14ம் தேதியன்று, இராணுவச் செலவை எதிர்க்கும் உலக நாளும் கடைப்பிடிக்கப்படுகின்றது. Stockholm உலக அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) 2018ம் ஆண்டில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, உலகில் இராணுவத்திற்கென 1.7 டிரில்லியன் டாலர் செலவழிக்கப்படுகின்றது எனத் தெரிகின்றது.

ஆசியா மற்றும் ஓசியானியா பகுதியில் சீனாவும், மத்திய கிழக்கில் சவுதி அரேபியாவும் இதில் முன்னணியில் உள்ளன. இரஷ்யாவில் இந்நிலை குறைந்திருப்பதாகவும், அதேநேரம், மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் அதிகரித்திருப்பதாகவும், Stockholm ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2019, 15:22