தேடுதல்

Alzheimer நோயாளிகள் பராமரிக்கப்படும் Villaggio Emanuele Alzheimer நோயாளிகள் பராமரிக்கப்படும் Villaggio Emanuele 

திருத்தந்தை, நொபெல் இயற்பியல் விருது பேராசிரியர்கள் சந்திப்பு

இரக்கத்தின் யூபிலி ஆண்டில் தொடங்கிய, வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களின் தொடர்ச்சியாக, Alzheimer நோயாளிகள் பராமரிக்கப்படும் உரோம் Villaggio Emanuele இல்லத்திற்கு, இவ்வெள்ளி மாலையில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உண்ணா நோன்பு என்பது, மற்ற மனிதர்கள் மற்றும் அனைத்து படைப்புயிர்கள் பற்றிய நம் தவறான எண்ணத்தை மாற்றுவதாகும்; நமது பேராசையைத் திருப்திப்படுத்தும் சோதனைகள் அனைத்தையும் கடந்து செல்வதாகும்; அன்புக்காகத் துன்புறுவதற்குரிய திறனைப் பெறுவதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 12, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

திருஅவையின் தலைமைப்பணியை ஏற்றது முதல், ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், ஒன்பது மொழிகளில், தனது டுவிட்டர் பக்கத்தில், சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தவக்காலத்தில், தவக்காலத்தையொட்டிய சிந்தனைகளைப் பதிவுசெய்து வருகிறார்.

நொபெல் இயற்பியல் விருது பெற்றவர்கள்

2018ம் ஆண்டின் நொபெல் இயற்பியல் விருது பெற்ற பேராசிரியர்கள், ஜெரால்ட் மொரூ (Gérard Mourou) அவர்களும், டோனா ஸ்டிரிக்லாண்ட் (Donna Strickland) அவர்களும், தங்களின் வாழ்க்கைத் துணைவர்களுடன், ஏப்ரல் 12, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர். 

சீரொளி இயற்பியல் (laser physics) துறையில், இவர்கள் ஆற்றிய பணிக்காக, 2018ம் ஆண்டில், இயற்பியலுக்கு நொபெல் விருது அறிவிக்கப்பட்டது.

கானடாவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லாண்ட் அவர்கள், கடந்த 55 வருடங்களில் முதன்முறையாக, நொபெல் இயற்பியல் விருதைப் பெற்ற பெண் என்ற சிறப்பை பெறுகிறார்.

1903ஆம் ஆண்டு மேரி க்யூரி அவர்களும், 1963ஆம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயர் அவர்களும், நொபெல் இயற்பியல் விருதைப் பெற்ற பெண்கள் ஆவர்.

வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்

உரோம் நகருக்கு வடக்கே, Alzheimer நோயாளிகள் பராமரிக்கப்படும் Villaggio Emanuele எனப்படும் இடத்திற்கு, இவ்வெள்ளி மாலையில் சென்று, அந்நோயாளிகளையும், அவர்களையும் பராமரிப்பவர்களையும் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். இரக்கத்தின் யூபிலி ஆண்டில் தொடங்கிய, வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களின் தொடர்ச்சியாக, அங்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2019, 15:35