தேடுதல்

Vatican News
திருத்தந்தை, லாத்வியா அரசுத்தலைவர் Vējonis திருத்தந்தை, லாத்வியா அரசுத்தலைவர் Vējonis  (Vatican Media)

திருத்தந்தை, லாத்வியா அரசுத்தலைவர் சந்திப்பு

லாத்வியா அரசுத்தலைவர் Raimonds Vējonis அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பின்னர், பன்னாட்டு உறவுகளின் திருப்பீடத்தின் நேரடிப் பொதுச்செயலர் பேரருள்திரு Antoine Camilleri அவர்களையும் சந்தித்து, கலந்துரையாடினார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

"இந்த உயிர்ப்புப் பெருவிழா நாள்களில், கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்ற வியப்புக்குரிய செய்தியை, உங்கள் வாழ்வு மற்றும் வார்த்தைகளால் அறிவியுங்கள்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் எண் கிழமைகளில், உயிர்ப்பின் பல்வேறு பரிமாணங்களை வலியுறுத்தி, தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 26, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில், இவ்வாறு பதிவு செய்திருந்தார்.  

லாத்வியா அரசுத்தலைவர்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், லாத்வியா நாட்டு அரசுத்தலைவர் Raimonds Vējonis அவர்களும், ஏப்ரல் 25, இவ்வியாழனன்று, லாத்வியாவின் சமுதாய மற்றும் சமயச் சூழல்கள் பற்றி கலந்துரையாடினர்.

லாத்வியா அரசுத்தலைவர் Vējonis அவர்கள், இவ்வியாழனன்று, வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது குறித்து செய்தி வெளியிட்ட, திருப்பீட தகவல் தொடர்பு அலுவலகம், இவ்வாறு கூறியுள்ளது.

திருப்பீடத்திற்கும், பால்டிக் நாடாகிய லாத்வியாவிற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள், பால்டிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஐரோப்பாவின் வருங்காலத் திட்டம் உட்பட, பல்வேறு உலகளாவிய விவகாரங்கள் குறித்து, திருத்தந்தையும், லாத்வியா அரசுத்தலைவரும், இச்சந்திப்பில் கலந்துரையாடினர் என்றும், அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

லாத்வியா அரசுத்தலைவர் Raimonds Vējonis அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பின்னர், பன்னாட்டு உறவுகளின் திருப்பீடத்தின் நேரடிப் பொதுச்செயலர் பேரருள்திரு Antoine Camilleri அவர்களையும் சந்தித்து, கலந்துரையாடினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

26 April 2019, 15:39