தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி  (Vatican Media)

"நம்பிக்கைக்காக தொடர் ஓட்டம்" குழுவைச் சந்தித்த திருத்தந்தை

"கிறிஸ்துவுக்குப் பிரமாணிக்கமாக இருந்துவரும் மறைசாட்சிகள், உயிர்த்த ஆண்டவரில் நாம் தொடர்ந்து நம்பிக்கை கொள்ள இயலும் என்பதை நமக்குச் சொல்கின்றனர்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கை ஆலயங்களில், வழிபாட்டில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உட்பட, மத நம்பிக்கைக்காக உயிரை இழக்கும் மறைசாட்சிகளை மனதில் கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏப்ரல் 24 இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"எல்லாக் காலங்களிலும், கிறிஸ்துவுக்குப் பிரமாணிக்கமாக இருந்துவரும் மறைசாட்சிகள், அநீதிக்கு இறுதி வெற்றி கிடையாது: உயிர்த்த ஆண்டவரில் நாம் தொடர்ந்து நம்பிக்கை கொள்ள இயலும் என்பதை நமக்குச் சொல்கின்றனர்" என்ற சொற்களை, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியாக பதிவு செய்திருந்தார்.

மேலும், இரத்த புற்றுநோயாலும், ஏனைய அரிதான நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் இளையோருக்கு உதவும் வண்ணம், இத்தாலியில், ஏப்ரல் 21ம் தேதி உயிர்ப்பு ஞாயிறன்று துவங்கிய ஒரு தொடர் ஓட்டத்தில் பங்கேற்றோர், ஏப்ரல் 24 இப்புதனன்று, திருத்தந்தை வழங்கிய மறைக்கல்வி உரைக்குப் பின்னர் அவரைச் சந்தித்தனர்.

"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழிநடத்துதலுடன், நம்பிக்கைக்காக தொடர் ஓட்டம்" என்ற பெயரில் துவங்கிய இத்தொடர் ஓட்டம், இத்தாலியின் வெனெத்தோ, எமிலியா, ரோமாஞா, மார்க்கே, உம்ப்ரியா மற்றும் இலாசியோ ஆகிய பகுதிகளில், 530 கி.மீ. தூரம் தன் தொடர் ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தின் முன்புறம் அமைந்துள்ள திருத்தந்தை 12ம் பயஸ் வளாகத்தில் இப்புதன் காலை வந்து சேர்ந்த இந்தத் தொடர் ஓட்டத்தின் உறுப்பினர்கள், இறுதியாக, இந்தத் தொடர் ஓட்ட கழியை, நான்கு வயது நிறைந்த ஒரு சிறுவனிடம் ஒப்படைத்தபின்னர், அச்சிறுவன், இக்கழியை திருத்தந்தையிடம் கொடுத்தான்.

இச்சிறுவன், மிக ஆபத்தான ஒரு கட்டி அகற்றப்பட்டு, தற்போது உடல் நலம் தேறி வருபவன் என்பது குறிப்பிடத்தக்கது.

24 April 2019, 15:04