தேடுதல்

தூய பேதுரு பேராலயத்தில் திருத்தந்தையின் புனித வெள்ளி வழிபாடு தூய பேதுரு பேராலயத்தில் திருத்தந்தையின் புனித வெள்ளி வழிபாடு 

திருத்தந்தை தலைமையேற்கும் புனிதவார வழிபாடுகள்

"புனிதர்கள், பாவிகள், அவருடைய காலத்து மக்கள், நாம் வாழும் காலத்து மக்கள் என, நம் ஒவ்வொருவர் மீதும் கொண்ட அன்பினால், கிறிஸ்து உயிர் துறந்தார்" -திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித வாரத்தின் கருத்துக்களை தன் டுவிட்டர் செய்திகளில் வெளியிட்டு வரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'புனித வாரம்' (#Holy Week) என்ற ‘ஹாஷ்டாக்’குடன் ஏப்ரல் 17, இப்புதனன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார்.

"புனிதர்கள், பாவிகள், அவருடைய காலத்து மக்கள், நாம் வாழும் காலத்து மக்கள் என, நம் ஒவ்வொருவர் மீதும் கொண்ட அன்பினால், கிறிஸ்து உயிர் துறந்தார்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், ஏப்ரல் 18, புனித வியாழன் காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் வழிபாட்டையும், அருள்பணித்துவத்தை கொண்டாடும் திருப்பலியையும் தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வியாழன் மாலை, 4.30 மணிக்கு, உரோம் நகருக்கருகே அமைந்துள்ள வெல்லெத்ரி (Velletri) சிறையில் நிகழ்த்தும் 'ஆண்டவரின் இறுதி இரவுணவு' திருப்பலியில், கைதிகளின் காலடிகளைக் கழுவும் சடங்கை நிறைவேற்றுவார்.  

ஏப்ரல் 19, புனித வெள்ளியன்று, மாலை 5 மணிக்கு ஆண்டவரின் பாடுகள் மற்றும் திருச்சிலுவை வணக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி நடைபெறும் திருவழிபாட்டை நடத்தியபின், இரவு 9.15 மணிக்கு, உரோம் நகரில் அமைந்துள்ள கோலோசேயம் திடலில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியையும் முன்னின்று நடத்துவார் திருத்தந்தை.

ஏப்ரல் 20, புனித சனிக்கிழமை இரவு, 20.30 மணிக்கு, பாஸ்கா திருவிழிப்பு வழிபாட்டை நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று, காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருப்பலியை நிறைவேற்றியபின், நண்பகலில், வளாகத்தின் மேல் மாடத்திலிருந்து, 'உர்பி எத் ஓர்பி' என்ற சிறப்புச் செய்தியை வழங்குவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2019, 15:41