தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன், ஐ.நா. அவையின் முன்னாள் பொதுச்செயலர் திருத்தந்தையுடன், ஐ.நா. அவையின் முன்னாள் பொதுச்செயலர்  (Vatican Media)

திருத்தந்தையுடன், ஐ.நா. அவையின் முன்னாள் பொதுச்செயலர்

"தன்னலத்தைத் துறக்கும் சக்திமிகுந்த துணிவை, இயேசு, சிலுவையிலிருந்து நமக்குச் சொல்லித் தருகிறார்..." - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசுவின் கல்வாரிப்பயணத்தை நினைவுறுத்தும் புனித வாரத்தை நெருங்கியுள்ள வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 11 இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் செய்தியில், சிலுவையை மையப்படுத்தி, தன் கருத்துக்களை வெளியிட்டார்.

"தன்னலத்தைத் துறக்கும் சக்திமிகுந்த துணிவை, இயேசு, சிலுவையிலிருந்து நமக்குச் சொல்லித் தருகிறார். பாரமான சுமைகளால் நசுக்கப்படும் வேளையில், நாம் முன்னே செல்ல இயலாது" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, #தவக்காலம் (#Lent) என்ற 'ஹாஷ்டாக்' உடன் இவ்வியாழனன்று வெளியாயின.

மேலும், ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச்செயலரும், அகில உலக ஒலிம்பிக் கழகத்தின் நன்னெறிக் குழுவின் இந்நாள் தலைவருமான பான் கி மூன் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே, தென் சூடான் அரசுத் தலைவருடன், ஏனைய அரசு அதிகாரிகள், மற்றும், அந்நாட்டின் கத்தோலிக்க, கிறிஸ்தவத் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு தியானம், திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 10, இப்புதனன்று பிற்பகல் இந்த தியான முயற்சியின் துவக்கத்தில், இதில் பங்கேற்போர் அனைவரையும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வரவேற்ற வேளையில், இறைவனைச் சந்திக்கவும், அவரோடும், ஒருவர் ஒருவரோடும் ஒப்புரவாகவும் இது நல்லதொரு தருணம் என்று கூறினார்.

இந்த இருநாள் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 11, இவ்வியாழன் மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.

11 April 2019, 15:02