அல்லேலூயா வாழ்த்தொலி உரை அல்லேலூயா வாழ்த்தொலி உரை 

அன்பு நிறை இலங்கை நாட்டிற்கு தேவையானதை ஆற்ற....

உங்களின் ஒவ்வொரு வாழ்வு நடவடிக்கையிலும், உயிர்த்த இயேசு கொணர்ந்த மகிழ்வு மற்றும் அமைதியின் சாட்சிகளாக செயல்படுங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

குண்டு வெடிப்புக்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களோடு தான் மீண்டுமொருமுறை தன் ஆன்மீக, மற்றும், ஒரு தந்தைக்குரிய நெருக்கத்தை வெளியிடுவதாக, இத்திங்களன்று வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

என் அன்புக்குரிய சகோதரர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களோடும், கொழும்பு பெருமறைமாவட்ட விசுவாசிகளோடும் தான் மிக நெருக்கமாக இருப்பதாக தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரிழந்துள்ளோர் மற்றும் காயமடைந்துள்ள அனைவருக்காகவும் தான் செபிப்பதாக உறுதியளித்தார்.

குண்டு வெடிப்பு தாக்குதலால் துன்புறும் இந்த அன்பு நிறை நாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அனைத்து சமுதாயமும் ஆற்ற முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதாபிமானமற்ற, அதேவேளை, எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அனைவரும் தங்கள் கண்டனங்களை வெளியிட வேண்டும் எனவும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இத்திங்கள் நண்பகலில் திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்கு செவிமடுக்க புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களை நோக்கி, உங்களின் ஒவ்வொரு வாழ்வு நடவடிக்கையிலும், உயிர்த்த இயேசு கொணர்ந்த மகிழ்வு மற்றும் அமைதியின் சாட்சிகளாக செயல்படுங்கள் எனக் கேட்டு தன்  அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2019, 12:40