தேடுதல்

Vatican News
வெல்லெத்ரி நகரின் சிறைச்சாலைக்குச் சென்று திருப்பலியை நிறைவேற்றி, கைதிகளைச் சந்தித்த திருத்தந்தை வெல்லெத்ரி நகரின் சிறைச்சாலைக்குச் சென்று திருப்பலியை நிறைவேற்றி, கைதிகளைச் சந்தித்த திருத்தந்தை  (Vatican Media)

அடிமைகளின் பணியை செய்த இயேசு

மற்றவர்களுக்கு அன்பில் பணிபுரிய அழைப்புப் பெற்றுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்படும்போது, முரண்பாடுகள் அனைத்தும் மறைந்துவிடும் – திருத்தந்தையின் மறையுரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் அனைத்து வல்லமைகளும் இயேசுவுக்கு தரப்பட்டிருந்தும், ஓர் அடிமையின் நிலைக்கு தன்னைத்தானே அவர் கொணர்ந்ததை, பெரிய வியாழனின் பாதம் கழுவுதல் நிகழ்வு காண்பிக்கிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகருக்கு அருகிலுள்ள வெல்லெத்ரி நகரின் சிறைச்சாலைக்குச் சென்று, அங்குள்ள சிறைக்கைதிகளுக்கு ஆண்டவரின் இறுதி இரவுணவு திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிலிருந்து வீட்டுக்குள் வருவோரின் தூசி படிந்த பாதங்களைக் கழுவிவிடும் அக்கால அடிமைகளின் பணியை தன் செயல் வழியாக காண்பித்த இயேசு, அதே வழியை தன் சீடர்களும் பின்பற்றவேண்டும் என அழைப்பு விடுத்தார் என்றார்.

பேராசையிலோ, அல்லது மற்றவர்களை அடக்கி ஆள்வதிலோ அல்ல, மாறாக, மற்றவர்களுக்குப் பணிபுரிவதில் உடன்பிறந்தோராய் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற அழைப்பையும், சிறைக்கைதிகளிடம் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பணிபுரிவதே உடன்பிறந்த நிலை, அது எப்போதும் தாழ்ச்சியுடன் கூடிய சேவையில் தன்னை வெளிப்படுத்துகின்றது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதைத்தான் உரோமை ஆயரிடமிருந்து, குறைந்தபட்சம், ஆண்டிற்கு ஒருமுறையாவது திருஅவை எதிர்பார்க்கிறது, அந்த சேவை அடையாளத்தைத்தான் நானும் நிறைவேற்ற உள்ளேன் என்றார்.

இயேசுவின் கட்டளையாகவும், அவர் போதித்த நற்செய்தியின் கட்டளையாகவும் இருக்கும் 'பணிபுரிதல்', மற்றவர்களை அவமானப்படுத்துவதற்கோ, தீயச் செயல்களை ஆற்றுவதற்கோ அழைப்பு விடுக்கும் கட்டளையல்ல, மாறாக, பணிபுரிதல் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கட்டளையாகும் என மேலும் கூறிய திருத்தந்தை, யார் பெரியவர் என சீடர்களுக்குள் வாக்குவாதம் வந்தபோது தலையிட்ட இயேசு, ஒரு குழந்தையை எடுத்துக்காட்டாக முன்வைத்து, குழந்தையின் மனம் போல் எளிமையானதாகவும் தாழ்ச்சியுடையதாகவும் நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்பதை காண்பித்தார் என்றார்.

வாழ்வில், பல்வேறு பிரச்னைகள் உள்ளன என்பதும், ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறோம் என்பதும் உண்மை, ஆனால், நாம் மற்றவர்களுக்கு அன்பில் பணிபுரிய அழைப்புப் பெற்றுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்படும்போது, இந்த முரண்பாடுகள் தற்காலிக செயல்களாக மறைந்துவிடும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நான் இப்போது நிறைவேற்ற உள்ள காலடிகளைக் கழுவும் நிகழ்வு, நாம் ஒவ்வொருவரும் சேவையில் உடன்பிறந்தோராய், நண்பர்களாகச் செயல்பட உதவட்டும் என வேண்டி, தன் மறையுரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

19 April 2019, 12:30