இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் முடி திருத்துபவர், மற்றும், சிகை அலங்கார நிபுணர் குழுவுக்கு உரை வழங்கிய திருத்தந்தை இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் முடி திருத்துபவர், மற்றும், சிகை அலங்கார நிபுணர் குழுவுக்கு உரை வழங்கிய திருத்தந்தை 

பணியில் கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு சாட்சிகளாக செயல்படுதல்

புனித மார்ட்டின் டி போரஸ் அவர்களை, முடிதிருத்துவோர் மற்றும் சிகை அலங்கார நிபுணர்களின் பாதுகாவலராக, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1966ம் ஆண்டு அறிவித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் வானொலி

புனித மார்ட்டின் டி போரஸ் என்ற அமைப்பின் கீழ் இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் முடி திருத்துபவர்கள், மற்றும், சிகை அலங்கார நிபுணர்கள் குழுவை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தற்போதைய விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி, உரோம் நகரிலுள்ள அப்போஸ்தலர்களின் கல்லறைகளைத் தரிசிக்கவும், புனித பேதுருவின் வழித் தோன்றலைச் சந்திக்கவும் திருப்பயணம் மேற்கொண்டுள்ள அவர்களுக்கு தான் நன்றியுரைப்பதாக தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அவர்கள் வழங்கியுள்ள முக்கிய இடத்தையும், தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் மத பரிமாணத்தையும் வெளிப்படுத்துவதாக இப்பயணம் உள்ளது எனத் தெரிவித்தார்.

தொமினிக்கன் துறவு சபையில் இணைந்து, மிகுந்த தாழ்ச்சியுடன், ஏழைகளுக்கும், நோயுற்றோருக்கும் பணிபுரிந்த பெரு நாட்டு குடிமகனான புனித மார்ட்டின் டி போரஸ் அவர்களை, முடிதிருத்துவோர் மற்றும் சிகை அலங்கார நிபுணர்களின் பாதுகாவலராக, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் 1966ம் ஆண்டு அறிவித்ததை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவர்கள் தொடர்ந்து கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு சாட்சிகளாக செயல்பட்டு வருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

தங்கள் வாடிக்கையாளர்களை இன்முகத்துடனும் இரக்கத்துடனும் நடத்தி, வீண் பேச்சுக்களை குறைத்து, அவர்களுக்கு ஊக்கத்தின் வார்த்தைகளை வழங்கும் இப்பணியாளர்களுக்கு, புனித மார்ட்டின் டி போரஸ், எப்போதும் துணைபுரிகிறார் என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2019, 15:07