Missionszentrale der Franziskaner என்ற அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் Missionszentrale der Franziskaner என்ற அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறைவன் குரலுக்கு நாம் செவிமடுக்கவேண்டிய அவசியம்

ஒவ்வொருவரின் வாழ்வு மற்றும் விசுவாசம் வழியே சான்று பகர்ந்து, நல்லதோர் எதிர்காலம் அனைவருக்கும் உருவாக்க உழைப்பதற்கு, நமக்குள் புதுப்பித்தல் முதலில் இடம்பெறவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏழைகளுக்கும், வாழ்வில் ஓரந்தள்ளப்பட்டோருக்கும் வழங்கப்படும் உதவி, நல்லதொரு வருங்காலத்தை உருவாக்கும் என்ற நோக்கத்தில், நல்மனம் கொண்ட அனைத்து மக்களையும் ஊக்குவிக்க அழைத்துவரும் Missionszentrale der Franziskaner என்ற அமைப்பிற்கு தன் வாழ்த்துக்களையும், நன்றியையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

இந்தப் பிறரன்பு துறவு அமைப்பு உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, தன்னைச் சந்திக்க வந்திருந்த இவ்வமைப்பின் பிரதிநிதிகளை, ஏப்ரல் 6, இச்சனிக்கிழமை காலை, திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய வேளையில் இவ்வமைப்பினரைப் பாராட்டினார் திருத்தந்தை.

மக்களின் ஏழ்மை தன்னைத் தொடுவதற்கு அனுமதித்த அசிசி நகர் புனித பிரான்சிசின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, Missionszentrale der Franziskaner அமைப்பினர், ஏழ்மையில் வாழ்ந்து, உலகம் முழுவதும் பிறரன்பு, ஒருமைப்பாடு மற்றும் உடன்பிறந்த உணர்வை ஊக்குவித்து வருவதற்காக திருத்தந்தை தன் நன்றியைக் கூறினார்.

ஒவ்வொருவரின் வாழ்வு மற்றும் விசுவாசம் வழியே சான்று பகர்ந்து, நல்லதோர் எதிர்காலம் அனைவருக்கும் உருவாக்க உழைப்பதற்கு, நமக்குள் புதுப்பித்தல் முதலில் இடம்பெறவேண்டும் என்றும், அதற்கு, இறைவன் குரலுக்கு நாம் செவிமடுக்கவேண்டிய அவசியம் உள்ளது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

பிரான்சிஸ்கன் துறவு சபையுடன் இணைந்து உழைக்கும் Missionszentrale der Franziskaner என்ற பிறரன்பு அமைப்பு, ஜெர்மன் நாட்டில் 1969ம் ஆண்டு Andreas Muller அவர்களால் துவக்கப்பட்டு, இன்று, உலகெங்கும், 110 நாடுகளில் பணியாற்றி வருகிறது என்பதும், 600 உதவி திட்டங்களை வறியோரிடையே செயலாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2019, 16:47