Monteverdeவின் சான் ஜூலியோ பங்குத்தளத்தில் குடும்பங்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் Monteverdeவின் சான் ஜூலியோ பங்குத்தளத்தில் குடும்பங்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

சான் ஜூலியோ பங்குத்தளத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

நம்மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு, அவரிடம் நம் ஐயங்களை ஒப்படைத்து, விடை தேடவேண்டும் – இளையோருக்கு திருத்தந்தையின் அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் அன்னையர், நமக்கு உணவூட்டி, வளர்த்ததுபோல், உண்ண உணவின்றி வாடும் ஏழைகளை அரவணைப்பதில் நாமும், ஓர் அன்னையைப்போல் மாறவேண்டும் என்று, இஞ்ஞாயிறன்று, இளையோரிடம் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் அம்மறைமாவட்ட பங்குத்தளங்களை அவ்வப்போது சந்தித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, உரோம் நகரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள Monteverdeவின் சான் ஜூலியோ பங்குத்தளம் சென்று, பல்வேறு பிரிவினரை, வெவ்வேறு குழுக்களில் சந்தித்தபோது, இளையோரிடம் இவ்வாறு கூறினார்.

இளையோரின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளுக்கு வழங்கவேண்டிய பொருளுதவிகள் குறித்து வலியுறுத்திப் பேசியதோடு, வாழ்வில் ஐயங்கள் எழும்போது, அதுகுறித்து அச்சம் கொள்ளாமல், நம்மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு, அவரிடம் நம் ஐயங்களை ஒப்படைத்து, விடை தேடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஞாயிறு பிற்பகல், சான் ஜூலியோ பங்குத்தளம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலிக்கு முன்னர், நோயுற்றோர், புதுமணத் தம்பதியர், திருமணத்திற்காக தயாரித்து வரும் இளையோர், ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

அதேவண்ணம், இப்பங்கைச் சேர்ந்த காரித்தாஸ் பணியாளர்கள், இளையோர், குடும்பத்தினர், மற்றும், இப்பங்குக் கோவிலைப் புதுப்பிக்க உதவியோர் ஆகிய அனைவரையும் தனித்தனிக் குழுக்களாகச் சந்தித்து அனைவரையும் ஆசீர்வதித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2019, 16:26