'வானவில்' என்ற பெயருடன் இயங்கிவரும் பாடகர் குழுவினருடன் திருத்தந்தை 'வானவில்' என்ற பெயருடன் இயங்கிவரும் பாடகர் குழுவினருடன் திருத்தந்தை 

வயதில் முதிர்ந்த 'வானவில்' பாடகர் குழுவுடன் திருத்தந்தை

வயதில் முதிர்ந்து, உடல் நலனில் தளர்ந்திருக்கும்போது, இசையும், பாடல்களும், பெரும் உதவியாக உள்ளன - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வயதில் முதிர்ந்து, உடல் நலனில் தளர்ந்திருக்கும்போது, இசையும், பாடல்களும், பெரும் உதவியாக உள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு பாடகர் குழுவினரிடம் கூறினார்.

பெல்ஜியம் நாட்டின் Bonheiden நகரில், அல்சைமர் (Alzheimer) நோயால் பாதிக்கப்பட்டோருக்கென இயங்கிவரும் ஒரு காப்பகத்திலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்த பிரதிநிதிகளை, ஏப்ரல் 3, இப்புதனன்று காலை, புனித 6ம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில் சந்தித்த திருத்தந்தை, அவர்களிடையே இயங்கிவரும் முதியோர் பாடகர் குழுவினரைப் பாராட்டினார்.

'வானவில்' என்ற பெயருடன் இயங்கிவரும் இந்தப் பாடகர் குழுவைச் சேர்ந்தவர்கள், தங்கள் காப்பகத்திற்கு வருகைதரும் மக்களை வரவேற்க பாடல்களை பாடுகின்றனர் என்பதை தான் அறிந்தபோது, மிகவும் மகிழ்ந்ததாகவும், அச்செய்தி தன் உள்ளத்தில் நம்பிக்கையை வளர்த்ததாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்குழுவினரிடம் கூறினார்.

அனைத்தும் முழுமையாக, சிறப்பாக உள்ளது என்பதைக் குறிப்பிடாமல், குறைகளையும் தன்னுள் கொண்டிருப்பதன் அடையாளமாக, வானவில் விளங்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்தக் காப்பகத்தில் வாழ்வோர், தங்கள் பலமிழந்த நிலையைப் பகிர்ந்துகொள்ளும் அதே வேளையில், வானவில்லைப் போல, நம்பிக்கையின் அடையாளமாகவும் விளங்குகின்றனர் என்று கூறினார்.

பெல்ஜியம் நாட்டின், Mechelen-Brussels பேராயரும், பெல்ஜியம் நாட்டின் முதன்மை ஆயருமான, கர்தினால் Jozef De Kesel அவர்களின் தலைமையில் திருத்தந்தையைச் சந்திக்க வந்திருந்த இக்குழுவினருக்கு, திருத்தந்தை தன் ஆசீரை, பெல்ஜியம் மொழியில் வழங்கியதோடு, அவர்கள் அனைவரையும் தனக்காகச் செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2019, 15:06