போஸ்னியா மற்றும் எர்சகொவினா அரசுத்தலைவருடன் திருத்தந்தை போஸ்னியா மற்றும் எர்சகொவினா அரசுத்தலைவருடன் திருத்தந்தை 

திருத்தந்தை, போஸ்னியா-எர்சகொவினா அரசுத்தலைவர் சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவர் Milorad Dodik அவர்களுக்கு, Gaudete et Exsultate, Amoris Laetitia, Evangelii Gaudium, Laudato Si', Christus Vivit ஆகிய தனது திருத்தூது அறிவுரை ஏடுகளை அன்பளிப்பாக அளித்தார்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

போஸ்னியா மற்றும் எர்சகொவினா குடியரசின் தற்போதைய அரசுத்தலைவர் Milorad Dodik அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஏப்ரல் 26, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் 34 நிமிடங்கள் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

போஸ்னிய பிரதமர் Zeljka Cvijanovic அவர்கள் உட்பட, 12 பேர் கொண்ட குழுவுடன் திருப்பீடம் சென்ற அரசுத்தலைவர் Dodik அவர்கள், அப்பகுதியின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமான, செர்பியாவின் புனித Sava அவர்களின் படம் ஒன்றை அன்பளிப்பாக அளித்தார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகளின் திருப்பீடத்தின் நேரடிப் பொதுச்செயலர் பேரருள்திரு Antoine Camilleri அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார், போஸ்னிய அரசுத்தலைவர் Milorad Dodik.

திருப்பீடத்திற்கும், போஸ்னியா மற்றும் எர்சகொவினா குடியரசுக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள், இக்குடியரசில் கத்தோலிக்கச் சமுதாயத்தின் இருப்பு, அக்குடியரசு எதிர்கொள்ளும் இப்போதைய பொருளாதார மற்றும் சமுதாயச் சவால்கள் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புகளில் இடம்பெற்றன.

பிரிவினைகளைக் களைந்து அமைதியைக் கொணர்வதற்கு, உரையாடல் மற்றும் ஒருவர் ஒருவரை மதிப்பதன் முக்கியத்துவமும் இச்சந்திப்புகளில் வலியுறுத்தப்பட்டது.

போஸ்னியா மற்றும் எர்சகொவினா குடியரசில், எட்டு மாதங்களுக்கு ஒருமுறை, சுழற்சி முறையில் அரசுத்தலைவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒருவர் செர்பியாவையும், இன்னொருவர் குரோவேஷியாவையும், மற்றொருவர் போஸ்னியாவையும் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆவர். 

மேலும், ஏப்ரல் 26, இவ்வெள்ளியன்று, San Giovanni Rotondo நகரின், Casa Sollievo della Sofferenza அமைப்பின் இயக்குனர் Domenico Crupi அவர்களையும் திருத்தந்தை சந்தித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2019, 15:36