தேடுதல்

Vatican News
ஏப்ரல் 19, புனித வெள்ளி, உரோம் நகர் கொலோசெயம் திடலில் திருத்தந்தை தலைமையேற்ற சிலுவைப்பாதை ஏப்ரல் 19, புனித வெள்ளி, உரோம் நகர் கொலோசெயம் திடலில் திருத்தந்தை தலைமையேற்ற சிலுவைப்பாதை  (Vatican Media)

கொலோசெயம் திடலில், திருத்தந்தை பிரான்சிஸ்

உரோம் நகரின் கொலோசெயம் திடலில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை மேற்கொள்ளும் மரபை, 18ம் நூற்றாண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள் உருவாக்கினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 19, புனித வெள்ளியன்று உரோம் நகரின் கொலோசெயம் திடலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்திய சிலுவைப்பாதை சிந்தனைகளை, கொன்சொலாத்தா (Consolata) துறவு சபையைச் சேர்ந்த அருள் சகோதரி யூஜேனியா பொனெத்தி (Eugenia Bonetti) அவர்கள் உருவாக்கியிருந்தார்.

'இனி ஒருபோதும் அடிமைகள் கிடையாது' என்று பொருள்படும் “Slaves no More” என்ற அமைப்பின் தலைவராக பணியாற்றும் 80 வயதான அருள் சகோதரி பொனெத்தி அவர்கள், மனித வர்த்தகத்தின் கொடுமைகளுக்கு உள்ளாகும் மக்களின் வேதனைகளை, இவ்வாண்டின் சிலுவைப்பாதை முயற்சியின் மையப்பொருளாக வடிவமைத்திருந்தார்.

உரோம் நகரின் கொலோசெயம் திடலில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை மேற்கொள்ளும் மரபை, 18ம் நூற்றாண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள் உருவாக்கினார். இடைக்காலத்தில் தடைப்பட்டிருந்த இந்த மரபை, 1964ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் மீண்டும் புதுப்பித்தார்.

2000மாம் ஆண்டு, புனித யூபிலி கொண்டாடப்பட்ட வேளையில், இந்தச் சிலுவைப்பாதையின் கருத்துக்களை, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் எழுதினார் என்பதும், 2005ம் ஆண்டு நடைபெற்ற சிலுவைப்பாதையின் கருத்துக்களை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் எழுதினார் என்பதும், குறிப்பிடத்தக்கன.

திருத்தந்தையின் சார்பாக உரோமைய ஆயராகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் அவர்கள் துவக்கி வைக்க, ஒரு சில குடும்பத்தினர், துறவிகள் ஆகியோர், இவ்வாண்டு நடைபெற்ற சிலுவைப்பாதையின்போது, தலங்களுக்கு இடையே சிலுவையைச் சுமந்து சென்றனர்.

இச்சிலுவைப்பாதை பக்தி முயற்சியில், 15,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

20 April 2019, 12:10