தேடுதல்

Vatican News
தொர்த்தோசா நமதன்னை உடன்பிறப்பு அமைப்பினருடன் திருத்தந்தை தொர்த்தோசா நமதன்னை உடன்பிறப்பு அமைப்பினருடன் திருத்தந்தை  (Vatican Media)

ஒருமைப்பாட்டுணர்வின் புளிக்காரமாகச் செயல்படுங்கள்

தனது 400ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் தொர்த்தோசா உடன்பிறப்பாளர் நிலை அமைப்பினர், ஏழைகள் மற்றும் சமுதாயத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களை வரவேற்கும் இடமாக திருஅவையை அமைக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உடன்பிறப்பு உணர்விலும், பிறரன்பிலும் பணியாற்றுமாறு, தொர்த்தோசா நமதன்னை உடன்பிறப்பு அமைப்பினரிடம், ஏப்ரல் 12, இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்பெயின் நாட்டின், தொர்த்தோசா, இடைக்கச்சை நமதன்னை உடன்பிறப்பு அமைப்பின் ஏறக்குறைய அறுபது உறப்பினர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நானூறு ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை 5ம் பவுல் அவர்களால், இந்த அமைப்பு அங்கீகரிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.

தூய பேதுருவின் வழித்தோன்றலுக்கும், இந்த அமைப்புக்கும் இடையேயுள்ள பிணைப்பு, ஏதோ கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கருதாமல், இக்காலத்திற்கு ஏற்றதுபோல் அதை அமைக்குமாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சகோதரர்கள் அல்லது உடன்பிறப்பு உணர்வுகொண்டவர்கள் என தங்களையே அழைத்துக்கொள்ளும் இந்த அமைப்பினர், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை, வாழ்வில் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

சமுதாயத்தின் ஒவ்வொரு மூலையிலும் உடன்பிறப்பு உணர்வை உருவாக்குவது, இந்த அமைப்பினரின் பணி என்றும் கூறியத் திருத்தந்தை, ஒருமைப்பாட்டுணர்வின் புளிக்காரமாகச் செயல்படுமாறும், அன்னை மரியின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்நிகழ்வில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய, தொர்த்தோசா ஆயர் என்ரிக் பெனாவென்ட் அவர்கள், இடைக்கச்சை நமதன்னையின் வரலாற்றை விளக்கினார்.

தொர்த்தோசா பேராலயம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 1178ம் ஆண்டு மார்ச் 24க்கும் 25ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில், அன்று காலை திருவழிபாட்டிற்குத் தயாரித்துக்கொண்டிருந்த அருள்பணியாளருக்கு அன்னை மரியா காட்சியளித்து, தனது மேலாடையின் இடைக்கச்சையை, தனது அன்பின் அடையாளமாக அளித்தார் என்று பாரம்பரியமாகச் சொல்லப்படுகின்றது.

12 April 2019, 15:17