பிலிப்பீன்ஸ் நாட்டு திருப்பீடத் தூதர், பேராயர், Gabriele Giordano Caccia பிலிப்பீன்ஸ் நாட்டு திருப்பீடத் தூதர், பேராயர், Gabriele Giordano Caccia 

வெரித்தாஸ் வானொலி 50ம் ஆண்டு நிறைவு - திருத்தந்தையின் செய்தி

வெரித்தாஸ் வானொலி நிலையம், அன்பின் இறைவனை நோக்கியும், உண்மையை நோக்கியும் நேயர்களின் உள்ளங்களைத் திருப்பும் என்று நான் நம்புகிறேன், செபிக்கிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெரித்தாஸ் வானொலி நிலையம், நற்செய்தியைப் பறைசாற்றவும், வறியோரின் சார்பாக எழும் அன்புக்குரலாக விளங்கவும், தான் வாழ்த்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

1969ம் ஆண்டு நிறுவப்பட்ட வெரித்தாஸ் வானொலி நிலையம், அன்பின் இறைவனை நோக்கியும், உண்மையை நோக்கியும் நேயர்களின் உள்ளங்களைத் திருப்பும் என்று தான் நம்புவதாகவும், அதற்காக செபிப்பதாகவும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1969ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி பிலிப்பீன்ஸ் நாட்டில் பணியாற்றத் துவங்கிய வெரித்தாஸ் வானொலி நிலையத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழா, மணிலாவில் உள்ள புனித தோமா பாப்பிறை பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்ட வேளையில், பிலிப்பீன்ஸ் நாட்டு திருப்பீடத் தூதர், பேராயர், Gabriele Giordano Caccia அவர்கள் திருத்தந்தையின் செய்தியை வாசித்தார்.

இவ்விழாவில் பேசிய மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், அறியாமையை நீக்குவதற்கும், உண்மைக்கு பணியாற்றுவதற்கும் வெரித்தாஸ் வானொலி ஒரு கருவியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

குரலற்ற வறியோரின் சார்பாகவும், மறக்கப்பட்டு, சமுதாயத்தின் ஓரங்களில் தள்ளப்பட்டுள்ள மக்களை மையப்படுத்தியும், வெரித்தாஸ் வானொலி தன் பணிகளைத் தொடரும் என்று, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் கூறினார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2019, 15:08