தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது......170419 புதன் மறைக்கல்வியுரையின்போது......170419  (Vatican Media)

மறைக்கல்வியுரை – இயேசுவின் இறுதி நாட்களின் செபங்கள்

இறைவனின் மகிமைக்காக வாழ்வதும், துன்பங்களின்போது தந்தையிடம் முழு நம்பிக்கையுடன் நம்மை ஒப்படைப்பதும், இறைமன்னிப்பைப் பெற்று, பிறரை மன்னிக்கும் மன உறுதியை கண்டுகொள்வதும், அருள் கொடைகள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தாலியில், கோடை காலம் அருகிலுள்ளது என்பதை, ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் வெப்ப அளவு சுட்டிக்காட்டி நிற்கின்றது. அதிகாலையில், குளிர்காற்று இன்னும் வீசிக் கொண்டிருந்தாலும்,  நேரம் செல்ல செல்ல, இதமான வெப்பம் மக்களை அரவணத்துச் செல்லும் சூழலில், புனித பேதுரு பசிலாக்காப் பேராலய வளாகத்தில், திருப்பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் நிரம்பியிருக்க, அவர்களிடையே ஒருமுறை தன் வாகனத்தில் வலம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற செபம் குறித்த தன் மறைக்கல்வித் தொடரின் ஒரு பகுதியாக, இன்று, இயேசு, தன் இறுதி நாட்களில் செபித்த செபங்கள் குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அன்பு சகோதர சகோதரிகளே, கடந்த சில வாரங்களாக, இயேசு கற்பித்த, ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’, என்ற செபத்தில் காணப்படும் கருத்துக்களை சிந்தித்து வரும் நாம், இயேசுவின் உயிர்ப்புடன் தொடர்புடைய இறுதி மூன்று புனித நாள்களுக்கு முந்தைய நாளான இப்புதனில், இயேசு தன் தந்தையை நோக்கி செபித்த மூன்று செபங்கள் குறித்து சிந்திப்போம். அவர் தன் மரணம் மற்றும் உயிர்ப்பை நெருங்கி வந்த நாட்களில், இந்த செப வேளைகள் இடம்பெற்றன. முதல் செபமானது, இறுதி இரவு உணவுக்குப்பின் இடம்பெற்றது. “தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்” (யோவான் 17:1), என்பதாக இருந்தது அச்செபம். இரண்டாவது செபமோ, கெத்சமனி தோட்டத்தில் இடம்பெற்றது. "அப்பா, தந்தையே" (மாற்கு 14:36), எனத் துவங்கும் இச்செபத்தில், இயேசு, தன்னையே முழுமையாக இறைத்தந்தையிடம் ஒப்படைக்கிறார். மூன்றாவது செபமோ, அவரது சிலுவைப்பாடுகளின் உச்சக்கட்டத்தில் இடம்பெறுகிறது. “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (லூக். 23:34), என நமக்காக செபிக்கிறார் இயேசு. வரும் நாட்களில் நாம், ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற செபத்தை செபிக்கும்போது,  மூன்று அருள்கொடைகளுள் ஒன்றை நமக்கு அருளுமாறு இறைவனை நோக்கி ஒவ்வொருவரும் இறைஞ்சுவோம். அந்த அருள்கொடைகள் என்னவெனில், நம்முடைய வாழ்வை இறைவனின் மகிமைக்காக, அதாவது, அன்புடன் வாழ்வதும், துன்பம் நிரம்பிய வேளைகளில், எவ்வாறு தந்தையிடம் முழு நம்பிக்கையுடன் நம்மை ஒப்படைப்பது என்பதை அறிந்துகொள்வதும், இறைவனுடன் நாம் கொள்ளும் சந்திப்பின்போது, மன்னிக்கப்பட நம்மை அனுமதித்து, பிறரை மன்னிப்பதற்கான மன உறுதியை கண்டுகொள்வதும் ஆகும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

17 April 2019, 12:10