தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது.......10042019 புதன் மறைக்கல்வியுரையின்போது.......10042019  (Vatican Media)

மறைக்கல்வியுரை – உணவைப்போல் மன்னிப்பும் தினசரி தேவை

நாம் அன்புகூருமுன்னரே நம்மை அன்புகூர்ந்தது மட்டுமல்ல, பிறரை மன்னிக்க, தன் மன்னிப்பின் வழியாக கற்றுத்தந்த இறைவன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என, இயேசு கற்பித்த செபம் குறித்து, தன் புதன் மறைக்கல்வி உரைகளில், கருத்துக்களைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, நம் பாவங்களை மன்னிக்குமாறு இறைவனிடம் வேண்டும் பகுதியை மையப்படுத்தி, விளக்கமளித்தார்.

கடந்த இரு நாட்களாக நல்ல சூரிய ஒளியுடன் விளங்கிய வானம், இப்புதன்று காலையிலேயே தூறத் தொடங்கினாலும், திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கு செவிமடுக்க வந்த கூட்டத்திற்கு குறைவில்லை. மழையையும் பொருட்படுத்தாமல், திருப்பயணிகள், குடைகளைத் தாங்கி குழுமியிருக்க, திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.

திருத்தந்தையின் உரைக்கு முன்னர், புனித யோவான் எழுதிய முதல் திருமடலிலிருந்து, ‘பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்’ என்ற பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது. இவ்வாசகத்தைத் தொடர்ந்து, திருத்தந்தை தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற செபம் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, 'எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்' (மத். 6:12),  என இறைவனை நோக்கி கேட்க, இயேசு கற்பித்த விண்ணப்பத்தை சிந்திப்போம்.

நமக்கு உணவு தேவைப்படுவதுபோல், மன்னிப்பும் தேவைப்படுகின்றது. ஆம். தினமும் தேவைப்படுகின்றது. மத்தேயு நற்செய்தியின் கிரேக்க மூலப்படிவத்தில், 'குற்றங்கள்' என பயன்படுத்தப்பட்ட வார்த்தை, ‘கடன்பட்டிருத்தல்’ என்ற அர்த்தத்தைக் கொண்டதாக இருந்தது.  ஆகவே, கிறிஸ்தவர்கள், ‘எங்கள் கடனை மன்னியும்’ என செபிக்கத் துவங்கினர். நாம் உண்மையிலேயே இறைவனுக்கு கடன்பட்டுள்ளோம். ஏனெனில், நம்மிடம் இருப்பவை அனைத்தும் இறைவனிடமிருந்து கொடையாக வந்தவையே. நம் வாழ்வு, நம் பெற்றோர், நண்பர்கள், நம்மைச் சுற்றியுள்ள இயற்கை என, அனைத்தும், அவர் கொடையே. நம்மால் அன்புகூர முடிகிறது என்றால், நாம் முதலில் அன்பு கூரப்பட்டுள்ளோம் என்பதே காரணம். அதுபோல், மன்னிப்பைப் பெற்றுள்ளதால்தான், நம்மால் மன்னிக்க முடிகிறது. நாம் பிறப்பதற்கு முன்னிருந்தே நம்மை அன்புகூரும் அந்த அன்புப் பிணைப்பை,   இறையன்பின் நற்பேறான பிரசன்னத்தை, எப்படி நம்மால் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கமுடியும்? கடவுள் நம்மை அன்புக்கூர்வதுபோல், நம்மில் எவரும் அவரை அன்புக்கூர முடியாது. இதை உணர்ந்துகொள்ள, இயேசுவின் சிலுவையை உற்று நோக்கினாலே போதும். ஆகவே, நம்மிடையே வாழும் புனிதர்கள் கூட, என்றும் இறைவனுக்கு கடன்பட்டவர்களாக வாழ்கிறார்கள் என்பதை உணர்ந்து செபிப்போம். இறைத்தந்தையே, எம்மீது இரங்கியருளும்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

10 April 2019, 16:09