தேடுதல்

புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் 

மறைக்கல்வியுரை – இறை இரக்கம் வாழ்வுக்கு இன்றியமையாதது

உலகில் நம்பிக்கையின் பணியாளனாக இருப்பது என்பது, கலாச்சாரங்களிடையே பாலங்களை கட்டியெழுப்புவதாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

“பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும், என இயேசு கூறிய உவமை, ஆரம்பத்தில் வாசிக்கப்பட, மொராக்கோ நாட்டில் தான் மேற்கொண்ட  அண்மை திருத்தூதுப் பயணம் குறித்து, இவ்வார புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே, நான் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள், மொராக்கோவில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டேன். அங்கு எனக்கு அளிக்கப்பட்ட இன்முக வரவேற்பிற்காக, மன்னர் ஆறாம் முகமதுவிற்கும், அரசு அதிகாரிகளுக்கும், என் நன்றியை தெரிவிக்கிறேன். அனைத்திற்கும் மேலாக, இன்றைய நவீன உலகில், நம்பிக்கையின் பணியாளனாக, நம் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுடன் ஆன கலந்துரையாடல் மற்றும் சந்திப்பின் பாதையில் இன்னொரு படியை எடுத்துவைக்க இப்பயணம் உதவியதை எண்ணி, இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இன்றைய நவீன உலகில் நம்பிக்கையின் பணியாளனாக இருப்பதென்பது, கலாச்சாரங்களிடையே பாலங்களை கட்டியெழுப்புவதாகும். இப்பணியை, மொராக்கோ நாட்டில், அந்நாட்டு மக்கள், மற்றும், அரசியல் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்களின்போது என்னால் மேற்கொள்ள முடிந்ததைக் குறித்து மகிழ்கின்றேன். மனித மாண்பை பாதுகாத்தல், நீதி மற்றும் அமைதியை ஊக்குவித்தல், நமது பொது இல்லமாகிய படைப்பைப் பராமரித்தல் போன்றவற்றில் மதங்களின் முக்கிய பங்கை நானும், மன்னர் ஆறாம் முகமதுவும் இணைந்து மீண்டும் வலியுறுத்தினோம். புகலிடம் தேடுவோர் குறித்த கேள்வி இத்திருப்பயணத்தில் சிறப்பு முக்கியத்துவத்தைப் பெற்றது.  இந்நாட்டில் புகலிடம் தேடியுள்ளோர் மத்தியில், தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகளுக்கும், 'நான் அந்நியனாக இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்' என இயேசு கூறிய வார்த்தைகளை உணர்ந்து, தாராள மனதுடன் சிறப்புப் பணியாற்றி வரும் மக்களுக்கும், என் நன்றியை நேரிடையாக வெளியிட இது ஒரு வாய்ப்பாக இருந்தது. அருள்பணியாளர்கள், ஆண் பெண் துறவிகள், கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைகள் ஆகியோரை வாழ்த்தியபின், நிறைவேற்றப்பட்ட ஞாயிறு திருப்பலியில், கலந்து கொண்ட பல ஆயிரக்கணக்கானோர் மத்தியில், மன்னிப்பையும் ஒப்புரவையும் உள்ளடக்கிய இறைத் திட்டத்தை வெளிப்படுத்திய 'காணாமல் போன மகன்' குறித்த உவமைக் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிந்தது.  கடவுளின் இரக்கம், நம் வாழ்வுக்கு இன்றியமையாத ஒரு தேவை என்பதை புரிந்து ஏற்கவேண்டும். ஏனெனில், மீண்டும் பிறப்பெடுத்து, இறைவனின் அரவணைப்பில் வாழும் மனிதர்களே, இவ்வுலகில், நம்பிக்கையின் பணியாளர்களாக இருக்கமுடியும்.

இவ்வாறு, தன் அண்மை மொராக்கோ திருத்தூதுப் பயணம் குறித்து, இப்புதன் மறைக்கல்வி உரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட 'அமைதி மற்றும் வளர்ச்சிக்கான விளையாட்டுக்களின் உலக தினம் குறித்து எடுத்துரைத்து, விளையாட்டு என்பது, மோதல்களை வெற்றிகொள்ள பங்காற்றி, அனைத்து மக்களையும் அரவணைத்து ஒன்றிணைக்கும் அனைத்துலக மொழி என கூறினார். விளையாட்டு என்பது, மகழ்ச்சி, மற்றும், நல்லுணர்வுகளின் ஆதாரம். தனிமனிதர்கள், மற்றும், சமுதாயத்தில் மனிதாபிமான, மற்றும், சமூக வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் நன்மதிப்பீடுகளை வளர்க்கும் பள்ளி இது. விளையாட்டிலும் வாழ்விலும் உங்களுக்கு நல்லதே நடக்க ஆவல் கொள்கிறேன் என்று வாழ்த்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அனைவருக்கும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2019, 15:30