தேடுதல்

Vatican News
2019.04.24 Udienza Generale 2019.04.24 Udienza Generale  (Vatican Media )

மறைக்கல்வியுரை: பிறரை மன்னிக்க மறுப்பவர் மன்னிப்புப் பெறார்

நம்மை இறைவன் மன்னித்துள்ளதுபோல், நாமும் பிறரை மன்னிக்க வேண்டும் என நாம் மன்னிப்பின் வழியாக பெற்றுள்ள கொடை நமக்கு அழைப்பு விடுக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

புனித வாரக்கொண்டாட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், திருத்தந்தையின் இப்புதன் மறைக்கல்வி உரைக்குச் செவிமடுக்க, திருப்பயணிகள், சுற்றுலாப்பயணிகள் என மக்கள் கூட்டம் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தை நிறைத்திருக்க, முதலில் மத்தேயு நற்செய்தியிலிருந்து மன்னிப்பு குறித்த ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

பின்பு பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல;  எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன் என்ற பகுதி வாசிக்கப்பட்டபின், திருத்தந்தையும் தன் உரையைத் தொடர்ந்தார்.

அன்பு சகோதரர் சகோதரிகளே, ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’என இயேசு கற்பித்த செபம் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, 'எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல' என்ற வாக்கியம் குறித்து நோக்குவோம். இவ்வுலகில் நம் இருப்பு உட்பட, அனைத்தும் இறைவனிடம் இருந்து கொடையாகப் பெறப்பட்டது என்பதால், நாம் எப்போதும் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். நமது வாழ்வு என்பது, நமது விருப்பத்தினால் உருவானது அல்ல, மாறாக, இறைவனின் அன்பினால் உருவான மெய்ம்மை நிலை. ஆகவே, பாவம் குறித்து வருந்தும் இதயத்துடன் நாம் இறைவனின் மன்னிப்பை வேண்டும்போது, அவர் எப்போதும் நம்மை மன்னிக்கிறார். அதேவேளை, நம்மை இறைவன் மன்னித்துள்ளதுபோல், நாமும் பிறரை மன்னிக்க வேண்டும் என நாம் மன்னிப்பின் வழியாக பெற்றுள்ள கொடை நமக்கு அழைப்பு விடுக்கிறது. இதை நாம் இரக்கமற்ற பணியாள் என்ற இயேசுவின் உவமையில் காண்கிறோம். தான் பட்டிருந்த பெரிய கடன் சுமை மன்னிக்கப்பட்ட பணியாள், தன்னிடம் மிகச் சிறிய கடனைக் கொண்டிருந்த ஒருவரை மன்னிக்க மறுத்ததைக் குறித்து இந்த உவமை எடுத்துரைக்கின்றது. இங்கு கூறப்பட்டுள்ள செய்தி மிகத் தெளிவானது. அதாவது, பிறரை நாம் மன்னிக்க மறுக்கும்போது, நம் பாவங்களும் மன்னிக்கப்படா என்பதேயாகும் அது. மன்னிப்பு எனும் விலைமதிப்பற்ற கொடையை மற்றவர்களுக்கு, வழி வழியாக விட்டுச்செல்லும் அருளை, இறைவன் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வழங்குகிறார். ஒரு வார்த்தை, ஓர் அரவணைப்பு, அல்லது ஒரு புன்னகை வழியாக இந்த மன்னிப்பை நாம் வழங்க முடியும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த இயேசு சபையின் இரு தமிழர் உட்பட 12 புது திருத்தொண்டர்களுக்கு வாழ்த்துச் சொன்னார். பின்னர், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

24 April 2019, 14:41