தேடுதல்

Vatican News
அர்ஜென்டீனா நாட்டு  அருளாளர்கள் அர்ஜென்டீனா நாட்டு அருளாளர்கள் 

லிபியாவின் தடுப்புக் காவல் மையங்களில் வாழ்வோருக்கு உதவிட

லிபியாவின் உள்நாட்டு மோதல்களால் மேலும் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை மனிதாபிமான அமைப்புக்கள் உடனடியாக வழங்க, திருத்தந்தை அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் வானொலி

தென் ஆப்ரிக்காவில் அண்மைய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்துலக சமூகத்திலிருந்து கிட்டவேண்டும் எனவும், நம் ஒருமைப்பாட்டை அறிவித்து செபிப்போம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறன்று நண்பகலில் குழுமியிருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியபின், தென் ஆப்ரிக்காவின் அண்மை வெள்ளப்பெருக்குப் பற்றி குறிப்பிட்டு இவ்விண்ணப்பத்தை முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் ஆப்ரிக்காவின் தென் கிழக்கில் இடம்பெற்ற பெருமழையால், நிலச்சரிவுகளும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு, 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 1000க்கும் அதிகமானோர் குடியிருப்புக்களை இழந்துள்ளனர்.

தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், இவ்வெள்ளப்பெருக்கின் பாதிப்புக்கள் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, லிபியாவின் தடுப்புக் காவல் மையங்களில் வைக்கப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் புலம்பெயர்ந்தோரைக் குறித்த தன் கவலையையும் வெளியிட்டார்.

லிபியாவின் உள்நாட்டு மோதல்களால், மேலும் துன்பங்களை அனுபவிக்கும் இந்த மக்களுக்கு, தேவையான உதவிகளை, மனிதாபிமான அமைப்புக்கள் உடனடியாக வழங்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், விவசாயத் தொழிலாளிகளுக்கு ஆதரவாக, நிலஉரிமையாளர்களை எதிர்த்துப் போராடியதற்காக, 1976ம் ஆண்டு கொல்லப்பட்ட நான்கு அர்ஜென்டீனா நாட்டு இறையடியார்கள் இச்சனிக்கிழமையன்று திருஅவையில் அருளாளர்களாக அறிவிக்கபட்டது குறித்து பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதி மற்றும் பிறரன்பிற்காக கொல்லப்பட்ட இந்த இறையடியார்களின் எடுத்துக்காட்டு, நீதி மற்றும் ஒருமைப்பாடு நிறைந்த சமூகத்திற்காக உழைப்பவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கட்டும் எனவும் கூறினார்.

தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், இஞ்ஞாயிறன்று இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பித்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கு, அதாவது கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கு தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

28 April 2019, 13:00