பல்கேரியா, வட மாசிடோனியாவில் திருத்தந்தையின் பயணத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இலச்சனைகள் பல்கேரியா, வட மாசிடோனியாவில் திருத்தந்தையின் பயணத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இலச்சனைகள் 

பல்கேரியா, வட மாசிடோனியாவில் திருத்தந்தையின் பயண விவரம்

புனித அன்னை தெரேசா நினைவிடத்திற்குச் செல்வதும், அங்கு ஏழையர் சமுதாயத்தை சந்தித்து உரையாடுவதும் திருத்தந்தையின் வட மாசிடோனியா பயணத்தின் முக்கிய அம்சங்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா ஆகிய இரு நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது, திருப்பீடச் செய்தி தொடர்பகம்.

மே 5ம் தேதி காலை உரோம் நேரம் 7 மணிக்கு Fiumicino விமானத்தளத்திலிருந்து தன் பயணத்தைத் துவக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2 மணி நேரப் பயணத்திற்குப்பின் உள்ளூர் நேரம் 10 மணிக்கு சோஃபியா நகர் விமானதளத்தை அடைவார்.

அன்று காலையில் அரசு அதிகாரிகளை சந்தித்தபின், பிற்பகலில் புனிதர்கள் சிறில் மற்றும் மெத்தோடியுஸ் அவர்களின் புனிதப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் பேராலயம் சென்று செபித்து, அன்று மாலையே விசுவாசிகளுக்கான திருப்பலியை Knyaz Alexandar சதுக்கத்தில் நிறைவேற்றுவார்.

திருத்தந்தையின் மே 6ம் தேதி திங்கள் தின நிகழ்வுகள், புலம்பெயர்ந்த மக்கள் வாழும் ஒரு முகாமைச் சந்திக்கச் செல்வதிலிருந்து துவங்குகிறது. பின், Rakovsky செல்லும் திருத்தந்தை, அங்கு புது நன்மை வழங்கும் திருப்பலியை நிறைவேற்றியபின், மதிய உணவை பல்கேரிய நாட்டு ஆயர்களுடன் அருந்தி, அதன் பின் முதலில் கத்தோலிக்க சமுதாயத்தை சந்தித்து உரை வழங்குவார். அதே நாளில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களுடன் இணைந்து அமைதிக்கான கருத்துப் பரிமாற்றங்களிலும் பங்குபெறுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் மூன்று நாள் பயணத்தின் இறுதி நாளான மே 7ம் தேதி, செவ்வாயன்று சோஃபியா நகரிலிருந்து விடைபெற்று, வட மாசிடோனியா செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அரசியல் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்குப்பின், புனித அன்னை தெரேசா நினைவிடத்திற்கு, துறவு சபைகளின் அதிபர்களுடன் செல்வதுடன், அங்கு ஏழையர் சமுதாயத்தை சந்தித்து உரையாடுவார்.

மே 7ம் தேதி, உள்ளூர் நேரம் காலை 11.30 மணிக்கு மாசிடோனியா சதுக்கத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், பிற்பகலில் பிற கிறிஸ்தவ சபைகள், பிற மதத்தலைவர்கள், இளையோர் சமுதாயம் ஆகியோரை சந்தித்து உரையாடும் திருத்தந்தை, பின்னர் அருள்பணியாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் துறவறத்தாரை சந்தித்து உரையாடுவார்.

அன்று மாலையே வட மாசிடோனியாவிலிருந்து புறப்படும் திருத்தந்தை, உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு உரோம் நகர் வந்தடைவார், என திருப்பீடச் செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2019, 13:08