தேடுதல்

புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

நம் கைகளிலிருந்து கீழே நழுவவிட வேண்டிய கற்கள்

நாம் மேற்கொள்ளும் புறம் கூறுதல், தீர்ப்பிடுதல், தரம் தாழ்த்தல் போன்ற கற்களை கைகளிலிருந்து கீழே நழுவவிட வேண்டும் – திருத்தந்தையின் மூவேளை செப உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசுவை, இறைச்சட்டத்திற்கு எதிரானவராகவோ, உரோமையச் சட்டங்களுக்கு எதிரானவராகவோ காட்டும் நோக்கத்துடன், விபச்சாரத்தில் பிடிபட்டப் பெண்ணை, பரிசேயரும், மறைநூல் அறிஞரும், அவரிடம் கொண்டுவந்தனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

ஏப்ரல் 7, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

சட்டத்தின் பாதுகாவலர்களாக தங்களையே எண்ணிக்கொண்டு, விபச்சாரத்தில் பிடிபட்டப் பெண்ணை பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவிடம் கொண்டுவந்த வேளையில், மன்னிப்பின் வழியாக மீட்டு, ஒப்புரவின் வழியே புதுப்பிக்கும் இறைவனின் கருணையை இயேசு வெளிப்படுத்தி, அப்பெண்ணை மீட்டதைக் காண்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இயேசு, இவ்வுலகிற்கு தீர்ப்பு வழங்க வரவில்லை, மாறாக, இவ்வுலகை மீட்கவும், புதுவாழ்வை வழங்கவும் அவர் வந்தார் என்பதை, இப்பெண்ணை காப்பதற்கு மேற்கொண்ட அணுகுமுறை வழியே நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார் என்று திருத்தந்தை கூறினார்.

உங்களுள் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும் என்று இயேசு கூறியது, நாம் அனைவருமே பாவிகள் என்பதையும், மற்றவர்களை நோக்கி நாம் மேற்கொள்ளும் புறம் கூறுதல், தீர்ப்பிடுதல், தரம் தாழ்த்தல் போன்ற கற்களை கைகளிலிருந்து கீழே நழுவவிட வேண்டும் என்பதையும் உணரவைக்கும் சொற்களாக உள்ளன என்று மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2019, 16:20