தேடுதல்

Vatican News
மொராக்கோ திருப்பலியில் மறையுரையாற்றியபோது......... மொராக்கோ திருப்பலியில் மறையுரையாற்றியபோது.........  (AFP or licensors)

இரக்கத்தின் நற்செய்திக்கு சான்றுகளாக வாழுங்கள்

மகிழ்வுக் கொண்டாட்டங்களில் பங்குபெற மறுப்பதன் வழியாக, சந்திப்பின் இடத்தில் தனிமையையும், மகிழ்ச்சியின் இடத்தில் கசப்புணர்வையும் தேர்வு செய்கிறது மனித குலம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தந்தையின் இல்லத்தில் தங்குமிடங்கள் அதிகம் உள்ளன, ஆனால், அதற்குள் நுழையாமல், வெளியே நிற்பவர்கள், மகிழ்ச்சியைப் பகிர மறுக்கும் முடிவை தாங்களாகவே எடுத்தவர்கள்' என்ற கருத்தை மையமாக வைத்து, மொராக்காவில், இஞ்ஞாயிறன்று நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

காணமல்போன மகன் குறித்த இஞ்ஞாயிறு வாசகத்தை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணாமல்போன மகன் திரும்பி வந்ததும் மகிழ்ச்சியடைந்து விருந்துக்கு ஏற்பாடு செய்து, அதில் கலந்துகொள்ள தன் மூத்த மகனை தந்தை அழைத்தபோது, அந்த மகிழ்வில் கலந்துகொள்ள மூத்த மகன் மறுத்தது குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மகிழ்வுக் கொண்டாட்டங்களில் பங்குபெற மறுப்பதன் வழியாக, மூத்த மகன், சந்திப்பின் இடத்தில் தனிமையையும், மகிழ்ச்சியின் இடத்தில் கசப்புணர்வையும் தேர்வு செய்கிறான் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தம்பியைப் புரிந்துகொள்ளவும், மன்னிக்கவும் மறுத்ததோடு மட்டுமல்ல, தந்தையின் மன்னிக்கும் பண்பையும், ஏற்றுக்கொள்ள அவன் மறுக்கிறான் என்றார்.

திருந்தி வந்தவர் குறித்த மகிழ்ச்சியை ஒருபுறமும், தகுதியற்ற ஒருவருக்கு வழங்கப்படும் வரவேற்பு குறித்த எரிச்சலை மறுபுறமும் காண்கிறோம் என்றார் திருத்தந்தை.

இத்தகைய ஒரு பதட்ட நிலையை காயீன், ஆபேல் காலத்திலிருந்தே மனித குலம் அனுபவித்து வந்துள்ளது என்று, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நான் என்ன என் சகோதரனின் காவலாளியா' என்ற கேள்வி, தொடர்ந்து, மீண்டும் மீண்டும் எழுவதை நாம் காண்கிறோம் என்றார்.

பகைமை, பிரிவினைகள் மற்றும், பழிவாங்குதல் என்பவை, நம் ஆன்மாவைக் கொல்வதையும், நம் குழந்தைகளின் நம்பிக்கைகளை விஷமாக்குவதையும், நம் மகிழ்ச்சியை அழிப்பதையும் நாம் அறிந்திருந்தும், உடனடி நீதிக்கான சரியான வழி பகைமையும் பழிவாங்கலுமே என நம்பும் சோதனைக்கு நாம் பலவேளைகளில் உள்ளாகிறோம் என்பதை மறுக்கமுடியாது எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தந்தை ஏற்பாடு செய்த விருந்தில் மூத்த மகன் கலந்து கொண்டானா இல்லையா என்பது குறித்து விளக்காமலேயே முடிவுறும் இந்த உவமையின் இறுதிப் பகுதி, நம் ஒவ்வொருவராலும் எழுதப்பட்டு நிறைவுச் செய்யப்பட வேண்டியது என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் நற்செய்திக்கு சான்றுகளாக வாழும் ஒவ்வொருவருக்கும் தன் நன்றியை வெளியிடுவதாக தெரிவித்து, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

01 April 2019, 16:11