தேடுதல்

Vatican News
மனித வர்த்தகம் பற்றிய உலகளாவிய கரத்தரங்கு மனித வர்த்தகம் பற்றிய உலகளாவிய கரத்தரங்கு  (Vatican Media)

மனித வர்த்தகத்தை ஒழிப்பது, திருஅவையின் முக்கிய கடமை

விலைமதிக்க இயலாத ஒவ்வொரு மனிதருக்கும், விலையை நிர்ணயிக்கும் இவ்வுலகப் போக்கினால், மனிதர்களை வர்த்தகப் பொருளாக மாற்றுவது, நமது மனிதாபிமானத்திற்கு விழும் சாட்டையடி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மக்கள் "வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்" (யோவான் 10:10) என்று யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள வாக்கியம், இயேசுவின் உலக வாழ்வுக்கு ஒரு விருதுவாக்காக அமைந்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 11, இவ்வியாழனன்று, ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.

முழுமையை வழங்க இயேசு இவ்வுலகிற்கு வந்தார்

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர் பிரிவு, வத்திக்கானில் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில் உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மனிதரும் தங்கள் மனிதத்தின் முழுமையை அடைவதற்காகவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்பதை, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

மனிதர்கள் முழுமையான வாழ்வைப் பெறுவதற்கு இவ்வுலகம் உருவாக்கும் தடைகளில், மனித வர்த்தகம், மிகக் கொடுமையான ஒன்று என்று, திருத்தந்தை, தன் உரையில் கவலை வெளியிட்டார்.

மனிதருக்கு விலையை நிர்ணயிக்கும் உலகப் போக்கு

விலைமதிக்க இயலாத ஒவ்வொரு மனிதருக்கும், விலையை நிர்ணயிக்கும் இவ்வுலகப் போக்கினால், மனிதர்களை வர்த்தகப் பொருளாக மாற்றுவது, நமது மனிதாபிமானத்திற்கு விழும் சாட்டையடி என்பதை, தான் அடிக்கடி நினைவுறுத்தி வருவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்தக் குற்றத்தைச் செய்வோர், மற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், தங்களுக்கும் அழிவைக் கொணர்கின்றனர் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவான் 15:13) என்ற உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்க, நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

மனித வர்த்தகத்தை ஒழிப்பது முக்கியம்

மனிதர்கள் முழுமையையும், உயர்வையும் நோக்கி தங்கள் வாழ்வுப் பயணத்தை மேற்கொள்ள உதவிகள் செய்வதே, திருஅவையின் முக்கியமான பணிகளில் ஒன்று என்று, தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பணியின் மிக முக்கிய கடமை, மனித வர்த்தகத்தை ஒழிப்பது என்று வலியுறுத்திக் கூறினார்.

குழப்பமானதொரு சூழலில் சிக்கியிருக்கும் இவ்வுலகத்தில், மனித வர்த்தகத்திலிருந்து வறியோரை காப்பதில், திருஅவை பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தாலும், இன்னும் நாம் ஆற்றவேண்டிய பணிகள் பல உள்ளன என்பதை, தன் உரையின் இறுதியில் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

தன் குழந்தைப் பருவத்தில் ஓர் அடிமையாக விற்பனை செய்யப்பட்டு, பின்னர், இறைவனின் அன்பு மகளாக மாறிய புனித ஜோசப்பின் பக்கித்தா அவர்களின் பரிந்துரையால், மனித வர்த்தகத்தை ஒழிக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக என்ற வேண்டுதலோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

11 April 2019, 14:55