தேடுதல்

Vatican News
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி வழிபாட்டில், திருச்சிலுவையை முத்தமிடும் திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி வழிபாட்டில், திருச்சிலுவையை முத்தமிடும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

புனித வெள்ளி வழிபாட்டில் வழங்கப்பட்ட மறையுரை

"பூமியில் எந்த நாடு, இனம், மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவராயினும், நீங்கள் இகழப்பட்டு, புறக்கணிக்கப்பட்டால், மனித வரலாற்றின் மிக சிறந்த மனிதரான இயேசு உங்களில் ஒருவராக இருந்தார்"

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

"அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்" (எசாயா 53:3) என்று இறைவாக்கினர் எசாயா, இயேசுவைப் பற்றி கூறும் சொற்கள், அவரது பாடுகளின் நேரத்தில் மட்டுமல்ல, பிறப்பிலிருந்தே உண்மையான சொற்கள் என்று அருள்பணி இரானியேரோ காந்தலமெஸ்ஸா அவர்கள் மறையுரையாற்றினார்.

ஏப்ரல் 19, புனித வெள்ளி மாலை 5 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்திய புனித வெள்ளி வழிபாட்டில், பாப்பிறை இல்லத்தின் மறையுரையாளர், அருள்பணி காந்தலமெஸ்ஸா அவர்கள் மறையுரை வழங்கிய வேளையில், எசாயாவின் சொற்களையும், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவத்தையும் மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மனித சமுதாயத்தால் இகழப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, தங்கள் மனித மாண்பை இழந்து தவிக்கும் அனைத்து மனிதரோடும், சிலுவையில் அறையுண்ட இயேசு தன்னையே இணைத்துக்கொள்கிறார் என்ற கருத்தை, வரலாற்றின் சில எடுத்துக்காட்டுகளுடன், அருள்பணி காந்தலமெஸ்ஸா அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

ப்ரீமோ லேவி என்ற எழுத்தாளர் ஆஷ்விட்ஸ் வதை முகாம் குறித்து எழுதிய நூலில், "பூமியில் எந்த நாடு, இனம், மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவராயினும், நீங்கள் இகழப்பட்டு, புறக்கணிக்கப்பட்டால், மனித வரலாற்றின் மிக சிறந்த மனிதரான இயேசு உங்களில் ஒருவராக இருந்தார்" என்று கூறியுள்ளதை, அருள்பணி காந்தலமெஸ்ஸா அவர்கள், தன் மறையுரையில் மேற்கோளாகக் குறிப்பிட்டார்.

அடிமைகளாக விற்கப்பட்ட கறுப்பினத்தவர் உருவாக்கிய Negro Spirituals பாடல்களில் பயன்படுத்தப்படும், "என் துன்பங்களை யாரும் அறியார், யாரும் அறியார், இயேசுவைத் தவிர" என்ற சொற்களையும், அருள்பணி காந்தலமெஸ்ஸா அவர்கள் முன்வைத்தார்.

அநீதியும், அடக்குமுறையும் இறுதியில் வெல்லாது என்பதை, இயேசுவின் சிலுவை ஆணித்தரமாகக் கூறியுள்ளது என்று எடுத்துரைத்த அருள்பணி காந்தலமெஸ்ஸா அவர்கள், இயேசுவை சிலுவையில் அறைந்ததால், சக்தி கொண்டவர்களாக தங்களையே எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு, சிலுவை, ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்று கூறினார்.

20 April 2019, 12:18