தேடுதல்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருஅவையில் பாலின வன்கொடுமை குறித்து 16ம் பெனடிக்ட்

திருஅவையில் பாவங்கள் இருப்பினும், அது புனிதமானது, மற்றும் அழிக்க முடியாதது என்பதை நம்புவதற்கு, நமக்குள் பணிவும், தாய் திருஅவை மீது அன்பும் தேவை - முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவை முழுவதும் தீமையானது என்றும், அதனால், அதில் இணைவதிலிருந்து நம்மையேத் தடுத்துக்கொள்வதும், இன்று நாம் கடவுளுக்கு எதிராகக் சுமத்தும் குற்றம் என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்.

"திருஅவையும், பாலின வன்கொடுமை என்ற இடறலும்"

கத்தோலிக்கத் திருஅவையை கடந்த சில ஆண்டுகளாக வதைத்து வரும் பாலியல் வன்கொடுமை என்ற பிரச்சனையை மையப்படுத்தி, "திருஅவையும், பாலின வன்கொடுமை என்ற இடறலும்" என்ற தலைப்பில் முன்னாள் திருத்தந்தை அவர்கள் எழுதிய கட்டுரை, ஏப்ரல் 11, இவ்வியாழனன்று வெளியானது.

உலகின் அனைத்து கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் தலைவர்களும் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி முடிய வத்திக்கானில் மேற்கொண்ட ஒரு முக்கியமான கூட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் சிந்தனைகளை இக்கட்டுரை வழியே வழங்கியுள்ளார்.

இக்கட்டுரையை எழுதக் காரணம்

பாலியல் வன்கொடுமை என்ற பிரச்சனை திருஅவையை வேதனைக்கு உள்ளாக்கிய வேளையில், தான் திருஅவையின் தலைமைப் பொறுப்பில் இருந்ததாலும், தற்போது, முன்னாள் திருத்தந்தை என்ற முறையில், தன்னால் என்ன உதவிகள் செய்யமுடியும் என்று சிந்தித்ததாலும், இக்கட்டுரையை தான் எழுதியதாக, முன்னாள் திருத்தந்தை, இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலோடும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் ஒப்புதலோடும் தான் வெளியிடும் இக்கட்டுரையில் மூன்று பகுதிகள் உள்ளன என்பதை முன்னாள் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுரையின் மூன்று பகுதிகள்

1960 முதல், உலகெங்கும் பாலினப் புரட்சி என்ற பெயரில் வேறுபட்ட எண்ணங்கள் பரவி வந்தன என்பதும், அது திருஅவையிலும் தாக்கங்களை உருவாக்கின என்பதும் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது என்று கூறும் முன்னாள் திருத்தந்தை, இவ்வெண்ணங்கள், அருள்பணியாளர் வாழ்விலும், அவர்களின் உருவாக்கப் பணிகளிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் இரண்டாவது பகுதியிலும், இந்த மாற்றங்களைக் குறித்து இன்றைய திருஅவை கொண்டிருக்க வேண்டிய கண்ணோட்டம் மற்றும் பதிலிறுப்பு ஆகியவை மூன்றாம் பகுதியிலும் கூறப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறார்.

அலகை வழங்கும் ஆலோசனை

இந்தப் பிரச்சனையிலிருந்து வெளியேறி, தலைசிறந்த ஒரு திருஅவையை நமது முயற்சியால் நாமே உருவாக்கமுடியும் என்ற பாணியில் சிந்திப்பது, அலகை நமக்கு வழங்கும் ஒரு ஆலோசனை என்றும், இத்தகைய முயற்சி, நம்மை மேலும் இறைவனிடமிருந்து விலகச் செய்யும் என்றும், முன்னாள் திருத்தந்தை தெளிவாகக் கூறியுள்ளார்.

திருஅவை இன்றும் புனிதமானது

மனமாற்றம் இன்றி, வெறும் சட்டங்களின் உதவியுடன் இப்பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று எண்ணுவது தவறு என்று தன் கட்டுரையில் சுட்டிக்காட்டும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருஅவையில் பாவங்கள் இருப்பினும், அது புனிதமானது, மற்றும் அழிக்க முடியாதது என்பதை நம்புவதற்கு, நமக்குள் பணிவும், தாய் திருஅவை மீது அன்பும் தேவை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2019, 15:00