மொராக்கோ விமான நிலையத்தில் திருத்தந்தையை வரவேற்கும் குழந்தைகள் மொராக்கோ விமான நிலையத்தில் திருத்தந்தையை வரவேற்கும் குழந்தைகள் 

மொராக்கோ விமான நிலையத்தில் வரவேற்பு

விமானத்திலிருந்து திருத்தந்தை கீழே இறங்கி வந்ததும், அந்நாட்டு மன்னர் 6ம் முகமது திருத்தந்தையை வரவேற்றார். அந்நாட்டின் பாரம்பரிய உடையணிந்த இரு குழந்தைகள், திருத்தந்தைக்கு மலர்க்கொத்தை அளித்தனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பயணம் செய்த A320 ஆலித்தாலியா விமானம் தரையிறங்கி, முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே உரிய, 'பெவிலியன் ராயல்' என்ற இடத்தில் நின்றதும், மொராக்கோ நாட்டின் திருப்பீடத் தூதர், பேராயர் வித்தோ ராலோ அவர்கள், விமானத்திற்குள் சென்று திருத்தந்தையை வாழ்த்தினார். இவர் 2015ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி மொராக்கோ நாட்டின் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டவர்.

மொராக்கோவின் தலைநகர் ரபாட், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். தலைநகர் ரபாட்டை உள்ளடக்கிய ரபாட் பெருமறைமாவட்டத்தில் வாழும் 2 கோடியே 99 இலட்சம் மக்களுள் இருபதாயிரம் பேர் கத்தோலிக்கர். பேராயர் கிறிஸ்டோபால் லோப்பஸ் ரொமேரோ அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள ரபாட் உயர்மறைமாவட்டத்தில், 28 பங்குதளங்கள், 36 கல்வி நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டு, இந்த உயர் மறைமாவட்டத்தில், கத்தோலிக்கக் குழந்தைகள் 89 பேருக்கு, திருமுழுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விமானத்திலிருந்து திருத்தந்தை கீழே இறங்கி வந்ததும், அந்நாட்டு மன்னர் 6ம் முகமது திருத்தந்தையை வரவேற்றார். அந்நாட்டின் பாரம்பரிய உடையணிந்த இரு குழந்தைகள், திருத்தந்தைக்கு மலர்க்கொத்தை அளித்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி, விமான நிலையத்தில் எவ்வித வரவேற்புரையும் இடம்பெறவில்லை. வத்திக்கான் நாட்டின் தலைவர் என்ற முறையில் திருத்தந்தைக்கு அரசு இராணுவ மரியாதை வழங்கப்பட்டபின், ரபாட் பேராயர் முன்வந்து திருத்தந்தையோடு ஓரிரு வார்த்தைகள் பேசினார். பின், மன்னர் 6ம் முகமதுவுடன், விமான நிலையத்தில் உள்ள, அரச குடும்பத்திற்குரிய அறைக்கு திருத்தந்தை அழைத்துச் செல்லப்பட்டார். அவ்வறையில், அந்நாட்டு வரவேற்பு வழக்கமுறைப்படி, திருத்தந்தைக்கு, பேரீச்சம்பழமும் பாதாம் பாலும் வழங்கப்பட்டன.  அதற்குப்பின் விமான நிலையத்திலிருந்து 9.7 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இரண்டாம் டூர் ஹசான் (Tour Hassan) வளாகம் நோக்கி காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை ஒரு காரிலும், மன்னர் 6ம் முகமது அவர்கள், மற்றொரு காரிலும் பயணம் செய்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 March 2019, 15:16