தேடுதல்

Vatican News
லொரெத்தோ அன்னை மரியா திருத்தலம் லொரெத்தோ அன்னை மரியா திருத்தலம் 

“கிறிஸ்து வாழ்கிறார், அவரே நம் நம்பிக்கை” திருத்தூது அறிவுரை

நம் ஆண்டவரின் பிறப்பு, அன்னை மரியாவுக்கு அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் திருவிழாவன்று, திருத்தந்தை இந்த ஏட்டில் கையெழுத்திடுவது, இந்த ஏட்டை அன்னை மரியாவுக்கு முழுவதும் அர்ப்பணிப்பதன் அடையாளமாக உள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 25, வருகிற திங்களன்று இத்தாலியின் லொரெத்தோ அன்னை மரியா திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் பற்றிய உலக ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய, “கிறிஸ்து வாழ்கிறார், அவரே நம் நம்பிக்கை (Vive Cristo, esperanza nuestra)” எனப்படும் திருத்தூது அறிவுரை ஏட்டில் கையெழுத்திடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த அறிவுரை ஏடு, இளையோர்க்கு எழுதும் ஒரு கடிதம் போன்று அமைந்துள்ளது என்றும், “கிறிஸ்து வாழ்கிறார், அவரே நம் நம்பிக்கை” என்ற பொருள்கொண்ட இஸ்பானிய வார்த்தைகளால், இதன் முதல் வரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

நம் ஆண்டவரின் பிறப்பு, அன்னை மரியாவுக்கு அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் திருவிழாவன்று, திருத்தந்தை இந்த ஏட்டில் கையெழுத்திடுவது, இந்த ஏட்டை அன்னை மரியாவுக்கு முழுவதும் அர்ப்பணிப்பதன் அடையாளமாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25ம் தேதி, திருத்தந்தை கையெழுத்திட்டவுடன், அன்றே திருப்பீட செய்தியாளர் சந்திப்பில் இந்த ஏடு வெளியிடப்படும்.

கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் 28ம் தேதி முடிய, இளையோர், விசுவாசம் மற்றும் அழைப்பு என்ற தலைப்பில், உலக ஆயர்கள் மாமன்றம் வத்திக்கானில் நடைபெற்றது. 

22 March 2019, 15:03