தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் கர்தினால் Godfried Danneels திருத்தந்தையுடன் கர்தினால் Godfried Danneels 

கர்தினால் Danneels மறைவுக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

பெல்ஜியம் நாட்டின் Mechelen-Brussel உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயராகவும், அந்நாட்டு ஆயர் பேரவையின் முன்னாள் தலைவராகவும் விளங்கிய கர்தினால் Godfried Danneels அவர்களின் மறைவுக்காக திருத்தந்தையின் தந்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 14, இவ்வியாழன் காலையில் இறையடி சேர்ந்த கர்தினால் Godfried Danneels அவர்களின் மறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து, தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

பெல்ஜியம் நாட்டின் Mechelen-Brussel உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயராகவும், அந்நாட்டு ஆயர் பேரவையின் முன்னாள் தலைவராகவும் விளங்கிய கர்தினால் Danneels அவர்களின் மறைவுக்காக, Mechelen-Brussel உயர் மறைமாவட்டத்தின் தற்போதையப் பேராயர், கர்தினால் Jozef De Kesel அவர்களுக்கு, திருத்தந்தை, இத்தந்தியை அனுப்பியுள்ளார்.

கர்தினால் Danneels அவர்கள், பெல்ஜியம் ஆயர் பேரவையின் தலைவராகவும், திருப்பீடத்தின் பல்வேறு அவைகளில் உறுப்பினராகவும் செயல்பட்டவர் என்பதையும், 2014 மற்றும் 2015 ஆகிய இரு ஆண்டுகள் வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்றதையும் தன் தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாவை வெற்றி கொண்டு, உயிர்த்த ஆண்டவர் கிறிஸ்து, கர்தினால் அவர்களை இறையரசில் வரவேற்க தான் செபிப்பதாகக் கூறியுள்ளார்.

1933ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பிறந்த Godfried Danneels அவர்கள், 1957ம் ஆண்டு, அருள்பணியாளராகவும், 1977ம் ஆண்டு ஆயராகவும் அருள்பொழிவு பெற்று, 1979ம் ஆண்டு Mechelen-Brussel உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்றார்.

1983ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட Danneels அவர்கள், ஆயர்கள் மாமன்ற பேராயத்தின் உறுப்பினர் என்ற முறையில் பல்வேறு ஆயர் மாமன்றங்களில் பங்கேற்றதோடு, 2005ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைத் தெரிவு செய்த கர்தினால்கள் கான்கிளேவ் கூட்டத்திலும், 2013ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தெரிவு செய்த கர்தினால்கள் கான்கிளேவ் கூட்டத்திலும், பங்கேற்றார்.

கிரிகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, பல ஆண்டுகள், Louvain கத்தோலிக்க பல்கலைக் கழகத்தில் பேராசியராகப் பணியாற்றிய கர்தினால் Danneels அவர்கள், 2019ம் ஆண்டு மார்ச் 14, இவ்வியாழன், தன் 86வது வயதில் இறையடி சேர்ந்தார்.

14 March 2019, 15:43