தேடுதல்

இத்தாலிய குழந்தைநல மருத்துவர்கள் சந்திப்பு இத்தாலிய குழந்தைநல மருத்துவர்கள் சந்திப்பு 

இத்தாலிய குழந்தைநல மருத்துவர்களுடன் திருத்தந்தை

நோயுற்றோரை சந்தித்த போதெல்லாம் அவர்களைக் குணமாக்கிய இயேசுவிடமிருந்து மருத்துவர்கள் தங்கள் பணிக்குத் தேவையான சக்தியைப் பெறவேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிறப்பிலிருந்து, வளர் இளம் பருவம் வரை உள்ள காலம், மனித வளர்ச்சியில் மிக முக்கிய பரிணாம வளர்ச்சியுள்ள காலம் என்றும், இந்தக் கால இடைவெளியில், மனித உடலில் உருவாகும் மாற்றங்களைக் குறித்து, உலகளாவியப் புரிதல் அவசியம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த மருத்துவர்களிடம் கூறினார்.

இத்தாலிய குழந்தைநல மருத்துவர்கள் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களை, மார்ச் 21 இவ்வியாழன் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இக்கழகத்தினர், கடந்த 40 ஆண்டுகளில் 5,500க்கும் அதிகமான குழந்தை நல மருத்துவர்களை உருவாக்கியுள்ளதைக் குறிப்பிட்டு, தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

குழந்தைப்பருவம், மற்றும், வளர் இளம் பருவம் இரண்டையும் குறித்த கருத்துக்கள், ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற வகையில், மாறிக்கொண்டே வருவதால், இந்தப் பருவத்தினருக்கு உதவிகள் செய்யும் மருத்துவர்கள், தங்கள் அறிவுத்திறனை தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மதநம்பிக்கை கொண்ட மருத்துவர்கள், இயேசுவின் ஆளுமையிலிருந்தும், நற்செய்திகளிலிருந்தும் தங்கள் உந்து சக்தியைப் பெறவேண்டும் என்றும், நோயுற்றோரை சந்தித்த போதெல்லாம் அவர்களைக் குணமாக்கிய இயேசுவிடமிருந்து, அவர்கள், தங்கள் பணிக்குத் தேவையான சக்தியைப் பெறவேண்டும் என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

நோயுற்றோருடன் கொள்ளும் உறவில், அவரது நோயையும், அவரது தற்போதைய நிலையையும் மட்டும் சிந்திக்காமல், அவரை ஒரு தனித்துவமிக்க மனிதராகவும், அவரது வருங்காலத்தையும் மனதில் கொண்டு, அவர்கள் மீது அக்கறை கொள்ளுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவர்களிடம் விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2019, 14:59