தேடுதல்

 2013ம் ஆண்டு மறைக்கல்வியுரையில் நோயாளர் அரவணைப்பு 2013ம் ஆண்டு மறைக்கல்வியுரையில் நோயாளர் அரவணைப்பு  

திருத்தந்தையின் ஆறு ஆண்டுகள் பணி - புள்ளிவிவரங்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆறு ஆண்டுகள் தலைமைப் பணியின் ஒரு சிகரமாக, இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு அமைந்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோமை ஆயராகவும், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகவும், ஆறு ஆண்டுகள் தலைமைப்பணியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 13, இப்புதனன்று, நிறைவு செய்துள்ளதையொட்டி, வத்திக்கான் செய்தித்துறை, அவரது ஆறு ஆண்டுகள் பணியைக் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில், 1000த்திற்கும் மேலான மறையுரைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார் என்றும், இவற்றில் 670 மறையுரைகள், அவர் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், தன் உள்ளத்திலிருந்து எழுந்த எண்ணங்களை அவர் பகிர்ந்துகொண்ட மறையுரைகளாக அமைந்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள 264 புதன் மறைக்கல்வி உரைகளில், விசுவாச அறிக்கை, அருளடையாளங்கள், தூய ஆவியாரின் கொடைகள், திருஅவை, குடும்பம், இரக்கம், திருப்பலி, பத்துக் கட்டளைகள் ஆகிய கருத்துக்கள் இடம்பெற்றன என்பதும், தற்போது அவர் வழங்கிவரும் புதன் மறைக்கல்வி உரைகளில், "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என்ற செபம் இடம்பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் தலைமைப் பொறுப்பின் இறுதி நாட்களில் எழுதத் துவங்கிய Lumen Fidei என்ற திருமடலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்து, 2013ம் ஆண்டு ஜூன் மாதம் .வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, 'Laudato si' அதாவது, "இறைவா உமக்கே புகழ் - நம் பொதுவான இல்லமான பூமியைப் பேணுதல்" என்ற தலைப்பில், இயற்கை, சுற்றுச்சூழல் ஆகிய கருத்துக்களை மையப்படுத்தி, தன் இரண்டாம் திருமடலை 2015ம் ஆண்டு வெளியிட்டார்.

குடும்பத்தை மையப்படுத்தி, இரு ஆயர் மாமன்றங்களை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை, இந்த மாமன்றங்களின் விளைவாகவும், இன்னும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தவும், Evangelii gaudium, Amoris laetitia, மற்றும் Gaudete et exsultate என்ற மூன்று திருத்தூது அறிவுரை மடல்களை வெளியிட்டுள்ளார்.

இளையோரை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆண்டு நடத்திய ஒரு ஆயர் மாமன்றத்தின் எண்ணங்களைத் தொகுத்து உருவாக்கியிருக்கும் திருத்தூது மடல், மார்ச் 25ம் தேதி, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழாவன்று, அன்னை மரியாவின் புகழ்பெற்ற லொரேட்டோ திருத்தலத்தில், திருத்தந்தையால் வெளியிடப்படுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆறு ஆண்டுகள் தலைமைப் பணியின் ஒரு சிகரமாக, 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல், 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி முடிய, நடைபெற்ற இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு அமைந்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதுவரை மேற்கொண்டுள்ள 27 திருத்தூதுப் பயணங்களில், 41 நாடுகளில் உள்ள மக்களைச் சந்தித்துள்ளார் என்பதும், குறிப்பாக, ரியோ தி ஜனெய்ரோ, கிரக்கோவ், மற்றும் பானமா ஆகிய நகரங்களில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கோடிக்கணக்கான இளையோரை அவர் சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆறு ஆண்டுகளில், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நிகழ்த்திய புனிதர் பட்ட திருப்பலிகளில் அறிவித்த புனிதர்களில், திருத்தந்தையர் 23ம் ஜான், 6ம் பவுல், 2ம் ஜான் பவுல், அன்னை தெரேசா, பேராயர் ரொமேரோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

@pontifex என்ற முகவரியில், ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 9 மொழிகளில் வெளியிட்டு வரும் டுவிட்டர் டுவிட்டர் செய்திகளை, 4 கோடியே 80 இலட்சத்திற்கும் மேலானோர் பின்பற்றுகின்றனர். அதேவண்ணம், @franciscus என்ற முகவரியில் வெளியிடும் Instagram படங்களையும், காணொளிகளையும், 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2019, 15:38