தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை - தண்ணீர் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

மிகவும் எளிமையான மற்றும் விலைமதிப்பற்ற "சகோதரி தண்ணீருக்காக" இறைவனுக்கு நன்றி சொல்வோம். தண்ணீர், அனைவருக்கும் கிடைப்பதற்கு வழியமைப்போம்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழலியலின் சமத்துவநிலைக்கும், மனிதரின் உயிர்வாழ்வுக்கும், தண்ணீர் இன்றியமையாத சொத்தாக இருப்பதால், இது, மாசடையாலும், வற்றிவிடாமலும் இருக்கும்பொருட்டு, நன்கு நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.

மார்ச் 22, இவ்வெள்ளியன்று உலக தண்ணீர் நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குனர் José Graziano da Silva அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சித்திட்ட இலக்கிற்கு ஒத்திணங்கும் வகையில், "எவரையும் ஒதுக்காமல்" என்ற சுலோகத்துடன், இவ்வாண்டு உலக தண்ணீர் நாள் கடைப்பிடிக்கப்பட்டதை தனது செய்தியில் குறிப்பிட்டு, அதை மையப்படுத்தியே தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புதிய தலைமுறைகளுக்கு தண்ணீர் பாதுகாப்பு

நம்மில் பல சகோதரர், சகோதரிகளைப் பாதித்துள்ள புறக்கணிப்பு என்ற தீமையை ஒழிப்பதற்கு நாம் எல்லாரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், எவரும் ஒதுக்கப்பட்டுவிடாமல் இருப்பதற்கு, நீர்வள அமைப்புகளைப் பாதுகாத்து வந்தால் மட்டும் போதாது, மாறாக, புதிய தலைமுறைகள் தண்ணீரைக் கவனமாகப் பயன்படுத்தவும், அதைப் பராமரிக்கவும் கற்றுக்கொடுக்கப்பட் வேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

புதிய தலைமுறைகள், இப்பூமிக்கோளத்தில் வாழ்கின்ற அனைவருடன் சேர்ந்து, தண்ணீரின் மதிப்பை உணர்ந்து, அதைப் பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, தண்ணீரின் நன்மை மற்றும் பராமரிப்பு பற்றிய கல்வி, நம் அன்னை பூமி வழங்கும் வளங்களை மதித்து, அன்புகூர்வதற்கு, புதிய கண்ணோட்டத்தை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நாம் எல்லாரும் வருங்காலத்தை அமைக்க வேண்டிய கலைஞர்கள் என்றும், நம் பூமிக்கோளத்தின் வருங்காலத்தை அமைப்பது குறித்த தீர்மானங்களை உலகளாவிய சமுதாயம் ஏற்கனவே எடுத்துள்ளது என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, இவ்வுலகில் வாய்ப்பிழந்தவர்கள், தங்கள் நாடுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிவரத்தி செய்யப்பட வேண்டும் என்ற சவாலை நம்முன் வைத்துள்ளனர் என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.

தண்ணீர் உலக நாளில் இடம்பெறும் முன்னெடுப்புகள், தண்ணீர்ப் பற்றாக்குறையால் துன்புறும் மக்களுக்கும், வருங்காலத் தலைமுறைகளுக்கும் உதவும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், மிக எளிமையான மற்றும் விலைமதிப்பற்ற "சகோதரி தண்ணீருக்காக" இறைவனுக்கு நன்றி சொல்வோம். இத்தண்ணீர், அனைவருக்கும் கிடைப்பதற்கு வழியமைப்போம் என்ற சொற்களை, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2019, 14:35