தேடுதல்

உரோம் மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் உரோம் மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ்  

உரோம் மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு திருத்தந்தை உரை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மாநகராட்சிக்குச் சென்றதன் நினைவாக, கல்வி உதவித் தொகை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சிறிய அறை ஒன்றிற்கு, திருத்தந்தையின் Laudato si’ திருமடலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மாநகராட்சிக்கு, மார்ச் 26 இச்செவ்வாய் காலை 10.30 மணிக்குச் சென்று, உரோம் மேயர் விர்ஜீனியா ராஜ்ஜி (Virginia Raggi) அவர்களையும், மாநகராட்சி அதிகாரிகளையும் சந்தித்து உரையாற்றினார்.  

Capitoline குன்று அல்லது Campidoglio எனப்படும் இடத்தில் அமைந்துள்ள உரோம் மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று, அதன் நிர்வாகத்தினருக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மாநகர அதிகாரிகள், திருப்பீடத்துடன் பல்வேறு திருஅவை நிகழ்வுகளில், குறிப்பாக, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் ஒத்துழைத்து ஆற்றிய பணிகளுக்கு, தனிப்பட்ட முறையில், தான் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

ஏறக்குறைய 2,800 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட உரோம் மாநகரம், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வருகின்ற பல்வேறு மக்கள் இனங்களையும், பல்வேறு சமூக, மற்றும் பொருளாதாரச் சூழல்களிலிருந்து வருகின்ற மனிதர்களையும், எவ்வித வேறுபாடின்றி வரவேற்று ஒருங்கிணைத்து வருகின்றது என்று பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் தலைநகரமாகவும், கத்தோலிக்கத்தின் மையமாகவும் விளங்குகின்ற உரோம் மாநகரம், புனித திருத்தூதர்கள் பேதுரு, பவுல் உட்பட பல்வேறு மறைசாட்சிகளையும் பார்த்திருக்கின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, இம்மாநகரம், எண்ணற்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதிலும், இவ்வளவு வளமையான மரபுச்சொத்துக்களை நிர்வகிப்பதிலும், அரசு மற்றும் மதத் தலைவர்களுக்கிடையே மதிப்பும், ஒத்துழைப்பும், நல்லுறவும் அவசியம் என்றும் கூறினார்.  

உரோம் மாநகரின் மிகச் சிறந்த முகம், கிறிஸ்தவ அன்பு, குடிமக்களின் உணர்வு போன்றவை பாதுகாக்கப்படுவதற்கு, உரோம் மறைமாவட்டம், அரசு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றது என்பதையும் திருத்தந்தை எடுத்துச் சொன்னார்.

உரோம் மேயர் திருத்தந்தைக்கு நன்றி

மேலும், திருத்தந்தை ஆற்றிவரும் இரக்கச் செயல்களுக்கு உரோம் மேயர் விர்ஜீனியா ராஜ்ஜி) அவர்கள் நன்றி தெரிவித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மாநகராட்சிக்கு அதிகாரப்பூர்வமாகச் சென்றதன் நினைவாக, கல்வி உதவித் தொகை அமைப்பு ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும், சுற்றுச்சூழலுக்கு ஆதரவான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கென, மாநகராட்சியில் சிறிய அறை ஒன்றிற்கு, திருத்தந்தையின் Laudato si’ திருமடலின் பெயரைச் சூட்டியிருப்பதாகவும் உரோம் மேயர் அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2019, 15:00