தேடுதல்

Vatican News
உரோம் மேயர் அலுவலகத்திற்கு முன்னால் இருக்கின்ற வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை உரோம் மேயர் அலுவலகத்திற்கு முன்னால் இருக்கின்ற வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை  (ANSA)

உரோம் மக்கள் ஒன்றிணைந்த குழுமமாக வாழ திருத்தந்தை அழைப்பு

உரோம் திருஅவையின் முகம் எப்போதும் சுடர்விடுவதாய், இதயங்களைப் புதுப்பிக்கும் கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிப்பதாய் அமைவதற்கு குடிமக்கள் உழைக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உரோம் மாநகராட்சி அலுவலகத்திற்கு, மார்ச் 26 இச்செவ்வாய் காலையில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் குடிமக்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்களைத் தனித்தனியே வாழ்த்தினார்.

உரோம் மேயர் அலுவலகத்திற்கு முன்னால் இருக்கின்ற வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, உரோம் மக்கள், ஒருவர் ஒருவர் மீது அக்கறை காட்டி, ஒருவர் ஒருவருக்கு நெருக்கமாக இருந்து, ஒருவர் ஒருவரை மதித்து வாழுமாறு கேட்டுக்கொண்டார். 

ஒன்றிணைந்த குழுமமாக, நல்லிணக்கத்தில் வாழ்ந்து, நீதிக்காக மட்டுமல்லாமல், நீதி உணர்வில் செயல்படும் மக்களாக வாழ்வதன் வழியாக, இந்த நகரின் மிக அழகான விழுமியங்களுக்கு சாட்சியங்களாக, உரோம் குடிமக்கள் விளங்க முடியும் எனவும் திருத்தந்தை கூறினார்.

Capitoline குன்றை, உரோம் நகரின் தொட்டிலாகவும், உரோம் நிர்வாகம் மற்றும் குடிமக்கள் வாழ்வின் இதயத் துடிப்பாகவும் விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் ஆயர் மற்றும் இந்நகரின் அனைத்து கிறிஸ்தவர்களின் பணி பற்றி பற்றியும் எடுத்துரைத்தார்.

உரோம் திருஅவையின் முகம் எப்போதும் சுடர்விடுவதாய், இதயங்களைப் புதுப்பிக்கும் கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிப்பதாய் அமைவதற்கு நாம் உழைக்க வேண்டும், இதுவே குடிமக்களின் கடமை என்று கூறியத் திருத்தந்தை, கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றாதவர்களையும் தான் அன்புகூர்வதாகத் தெரிவித்தார். அவர்கள் நம் உடன்பிறப்புகள், அவர்களோடு எனது ஆன்மீக ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கின்றேன் என்றுரைத்த திருத்தந்தை, நம் பூமிக்கோளத்தை வருங்காலத் தலைமுறைகளுக்கு நன்முறையில் விட்டுச்செல்வதற்கும் நாம் எல்லாரும் முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

பணியாளர்கள் சந்திப்பு

உரோம் நிர்வாகத்திற்கு முதுகெலும்பாக வேலைசெய்யும் பணியாளர்கள், தலைப்பு செய்திகளில் இடம்பெறாவிடினும், அவர்கள் மாநகரில் அன்றாடம் ஆற்றும் பணிகள், உரோம் குடும்பங்களின் நியாயமான தேவைகளுக்கு உதவுகின்றன என்று ஊக்கப்படுத்தினார் மற்றும், அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

26 March 2019, 15:07