தேடுதல்

Vatican News
அலுவலக அறையில் திருத்தந்தை பிரான்சிஸ் அலுவலக அறையில் திருத்தந்தை பிரான்சிஸ்  

புனித யோசேப், திருத்தந்தை பிரான்சிஸ்

புனித யோசேப் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பின் விழாவன்று, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியைத் துவக்கினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

“புனித யோசேப்பே, கன்னி மரியின் கணவரே, திருஅவை முழுவதையும் எப்பொழுதும் கண்காணித்து, ஒவ்வொரு தருணத்திலும் அதைப் பாதுகாத்தருளும்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று செபித்துள்ளார்.

திருஅவையின் பாதுகாவலராகிய புனித யோசேப்பின் விழாவாகிய மார்ச் 19, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புனித யோசேப்பிடம், இவ்வாறு திருஅவைக்காகச் செபித்துள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பணியைத் துவங்கி, மார்ச் 19, இச்செவ்வாய்க்கிழமையோடு, ஆறு ஆண்டுகளை நிறைவடைகின்றன.

இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தையின் புனித யோசேப் பக்தி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டினாவில் பணியாற்றிய காலத்திலும், தற்போது வத்திக்கானில் தனது அலுவலக அறையிலும், உறங்கும் நிலையிலுள்ள புனித யோசேப் அவர்களின் திருவுருவத்தை வைத்துள்ளார்.

இத்திருவுருவத்தின் மீது தான் கொண்டுள்ள சிறப்பு பக்தி பற்றி, 2015ம் ஆண்டு சனவரியில் மணிலாவில் நடைபெற்ற உலக குடும்பங்கள் மாநாட்டில் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோசேப், உறுதியான மற்றும் அமைதியான மனிதர் என்பதால், இவரை நான் மிகவும் அன்புகூர்கிறேன் என்று கூறினார்.

ஏதாவது ஒரு பிரச்சனை அல்லது இன்னல் நேரிடுகையில், ஒரு துண்டுத் தாளில் அதை எழுதி, இந்த திருவுருவத்தின்கீழ் வைப்பேன், அவர், அது பற்றி கனவு காண்பார், அப்பிரச்சனைக்காகச் செபிப்பார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மணிலாவில் கூறினார். திருத்தந்தையின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், நித்திரையில் ஆழ்ந்துள்ள புனித யோசேப் திருவுருவம் உலகெங்கும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

19 March 2019, 15:19