தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

தவக்காலத்தில் திசைதிருப்பும் காரியங்களை விலக்க வேண்டும்

மார்ச் 16, இச்சனிக்கிழமை முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,897 ஆகும். அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 79 இலட்சம் ஆகும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் பொறுப்பாளர்களுடன், தவக்கால ஆண்டு தியானத்தை மார்ச் 15, இவ்வெள்ளியன்று முடித்து, வத்திக்கான் திரும்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலம் வலியுறுத்தும் முக்கிய கூறுகள் பற்றி, மார்ச் 16, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.

மேலெழுந்தவாரியான மற்றும் கவனத்தைச் சிதறடிக்கின்ற அனைத்துக் காரியங்களிலிருந்து விலகி, இன்றியமையாதவைகளுக்கு நாம் திரும்ப வேண்டும்  என்பதை, தவக்காலம் நினைவுபடுத்துகின்றது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன. மார்ச் 16, இச்சனிக்கிழமை முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,897 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 79 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், துறவிகள் பேராயத் தலைவர் கர்தினால் Joao Braz de Aviz அவர்களும், அப்பேராயத்தின் செயலர், பேராயர் Josè Rodriguez Carballo அவர்களும், பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kevin Joseph Farrell அவர்களும், அந்த அவையின் செயலர், அருள்பணி Alexandre Awi Mello அவர்களும், மார்ச் 16, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2019, 15:20