திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 

தவக்காலத்தையொட்டி திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பு

"தவக்காலப் பயணம் இன்று துவங்குகிறது. தன் இருகரம் விரித்து காத்திருக்கும் தந்தையிடம் திரும்பிவரும் வண்ணம், மனமாற்றத்துடனும், தவ முயற்சிகளுடனும் இக்காலத்தை வாழ, உங்களை அழைக்கிறேன்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 6, இப்புதனன்று துவங்கியுள்ள தவக்காலத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி, மனமாற்றம், தவமுயற்சி ஆகியவற்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறது.

"தவக்காலப் பயணம் இன்று துவங்குகிறது. தன் இருகரம் விரித்து காத்திருக்கும் தந்தையிடம் திரும்பிவரும் வண்ணம், மனமாற்றத்துடனும், தவ முயற்சிகளுடனும் இக்காலத்தை வாழ, உங்களை அழைக்கிறேன்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவதைப்போல், இவ்வாண்டும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தின் முதல் நாளாகிய திருநீற்றுப் புதனன்று மாலையில், பாவமன்னிப்பு பவனியையும், திருநீற்றுப் புதன் திருப்பலியையும் முன்னின்று நடத்துகிறார்.

மார்ச் 6, புதன் மாலை 4.30 மணிக்கு, உரோம் நகர், அவெந்தீனோ எனுமிடத்தில் அமைந்துள்ள புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து புறப்படும் பாவமன்னிப்பு பவனியில், திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர், துறவியர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஒரு மணி நேரம் நிகழும் இந்த பவனியின் இறுதியில், 5.30 மணிக்கு, புனித சபீனா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றி, பலியில் பங்கேற்றோருக்கு திருநீறை வழங்குகிறார் திருத்தந்தை.

திருநீறு வரலாறு

மார்ச் 6 இப்புதனன்று துவங்கும் தவக்காலத்தின் முதல் அடையாளமாக விளங்கும் சாம்பல், ஆரம்ப காலத்தில், தங்கள் பாவங்களுக்காக கடினமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்வோர் தங்கள் மீது பூசிக்கொண்ட அடையாளமாக இருந்தது என்பதும், நாளடைவில் அனைவரும் பூசிக்கொள்ளும் சாம்பலாக மாறிய இந்த அடையாளம், திருப்பலியின் ஒரு பகுதியாக மாறியது என்பதும் குறிப்பிடத்தக்கன.

அதேபோல், திருநீறு பூசப்பட்ட நேரங்களில், "நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" (தொடக்க நூல் 3:19) என்று கூறப்பட்ட சொற்கள், தற்போது, "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்கு 1:15) என்ற சொற்களாக மாறியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2019, 14:26